ஸ்ரீநகர்:
காஷ்மீருக்குள் இந்திய நாட்டின் எதிர்க்கட்சியினரை அனுமதிக்காமல் எதேச்சதிகாரத்துடன் செயல்படும் மோடி அரசு, ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை அனுமதித்துள்ளது.இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜக அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்து பேசினர். இவர்களில் 23 எம்.பி.க்கள் அடங்கிய குழு செவ்வாயன்று காஷ்மீரில் ஆய்வு செய்தது. பின்னர் இந்த குழுவினர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.இவர்களில் நிக்கோலாஸ் பெஸ்ட் என்பவர் கூறுகையில், ஜம்மு-காஷ்மீருக்குள் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்க்கட்சிகளையும் அனுமதிக்கலாம். இதுகுறித்து அரசுத் தரப்பு பரிசீலிக்க வேண்டும். ஒருவித ஏற்றத்தாழ்வு உள்ளது, அரசாங்கம் அதை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்றார்.