2047ல் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடுகிறபோது இந்தியா இப்படியே இருக்குமா அல்லது தனித்தனி நாடுகளாக மாறிவிடுமா என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவு வந்துள்ளது. காஷ்மீர் நிலைகுலைந்துள்ளது. அக்கினிக் குழம்பாக, கந்தகக் கிடங்காக தகித்துக் கொண்டிருக்கிறது. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தமாட்டோம் என்று போர்ப் பிரகடனம் செய்துள்ளன. இது மத்திய பாஜக அரசின் அழிவுக்கான அறிகுறி.இந்தியா ஒரு துணைக்கண்டம். ஒற்றுமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். ஒருநாடாக இந்தியா இருக்க வேண்டுமானால் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை தடுக்க வேண்டும். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். தில்லி பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள். தமிழகத்திலும் மாணவர்கள் போராடுகிறார்கள். தீமை அதிகமாகும் போது எதிர்விளைவுகள் நிகழும். குடியுரிமை திருத்த சட்டம் வங்காள விரிகுடாவில் தூக்கி எறியப்பட வேண்டும். காலம் கணியும். லட்சியம் நிறைவேறும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஒற்றுமை உணர்ச்சி நாடு முழுவதும் பரவும். வெல்வோம்.