திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் வசதி
குமரியிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்ல ரோப்கார் வசதி செய்து தரப்படுமா? என்று திமுக உறுப்பினர் ஆஸ்டின் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,“ திருவள்ளுவர் சிலைக்கு ரோப்கார் வசதி செய்திட கடல்சார் ஆய்வு திட்டத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு பரிசீலனையில் உள்ளது. செயற்கை மணற்பரப்பு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியரின் கருத்துரு பெறப்பட்டு நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தினக் கூலி பல் மருத்துவர்கள் நிரந்தரம்!
தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட பல் மருத்துவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என செய்யூர் உறுப்பினர் ஆர்.டி.அரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,“ தமிழகம் முழுவதும் வட்டார மருத்துவமனைகள் உள்ளிட்ட ஆயிரம் இடங்களில் டயாலிஸ் கருவி அமைக்கப்பட உள்ளது. அரசு மருத்துவர்கள் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தேசிய சுகாதாரத் திட்டத்தில் தினக் கூலி அடிப்படையில் ஒரு நாளைக்கு ரூ.800 என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பல் மருத்துவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. இருந்த போதிலும் அரசு பரிசீலனை செய்து வருகின்றது என்றார்.”
சாதியில்லா ஒரே துறை ஆவின்!
ஆவின் பாலகங்கள் அமைக்கும் வழிமுறைகளை அரசு தெளிவு படுத்தவேண்டும் என திமுக உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,“ அரசுத்துறைக்குச் சொந்தமான இடங்கள், தனியார் இடங்களில் ஆவின் பாலகம் துவங்கப்பட்டு வருகின்றது. 100 சதுர அடி இடம் சொந்தமாகவோ அல்லது பத்து வருடத்திற்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களைக் கொண்டு விண்ணப்பித்தால் ஆவின் பாலகம் அமைக்க யார் எந்த சாதி என்று பார்க்காமல் உரிமம் வழங்கி வரும் ஒரே துறை எங்கள் துறைதான்” என்றார்.