நாகர்கோவில், ஆக.27- தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. குளச்சல் அழிக்கால் மீனவர் கிராமத்தில் கடந்த வாரம் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தில் அப்பகுதியில் இருந்த 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கடல் நீருடன் வீடுகளுக்குள் மணலும் சென்றது. இதனால் வீட்டினுள்ளும் வீடுகளுக்கு வெளியே கடற்கரை சாலை, மரங்கள், செடிகள், கொடிகள் தெருக்கள் முழுவதும் லாரிகளில் மணலை கொட்டியதை போன்று கடல் மணல் நிறைந்திருந்தது. திடீரென ஏற்பட்ட இந்த கடல் சீற்றத்தால் பீதியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து வீட்டினுள் குவியலாக இருந்த மணலை கணபதிபுரம் பேரூராட்சி ஊழியர்கள் கடந்த சில நாள்களாக அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாயன்று காலை மீண்டும் அழிக்காலில் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மீண்டும் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவ கிராம மக்கள் பீதியடைந்தனர். கடல் சீற்றம் தொடருவதால் ஊருக்குள் கடல் நீர் புகாமல் இருக்க மணல் மூடைகளை கொண்டு தடுப்பை அப்பகுதி பெண்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் திருவள்ளூவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. திங்களன்று இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. ஏற்கனவே வந்துள்ள சுற்றுலா பயணிகள் மழையால் தாங்கள் தங்கிய விடுதி அறைகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் முக்கடல் சங்கமம் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான ஓட்டல்கள், சாலையோர கடைகள் திறக்கப்படவில்லை.