தமிழ்நாடு கவுன்சில் கூட்டத்தில் 31 தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். அவர்களில் ஒருவர் தோழர் அப்துல் வஹாப்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானவுடன் 1964 இறுதியில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 16 மாத காலம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பின்னர் கட்சியின் கேரள மாநிலக்குழு வேண்டுகோளுக்கிணங்க 1970களில் கோட்டயம் மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றி திரும்பினார். 1975ல் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், அப்போது முதல் தீக்கதிர் நாளேட்டின் பொது மேலாளராக பொறுப்பேற்று 2001 வரை அப்பொறுப்பை நிறைவேற்றி, தீக்கதிர் நாளேட்டை தங்கு தடையின்றி வெளிவரச் செய்யும் மகத்தான பணியாற்றினார். தீக்கதிர் நாளேட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவர் தோழர் ஏ.அப்துல் வஹாப் என்றால் மிகையல்ல. வாரப் பத்திரிகையாக இருந்த தீக்கதிரை தினசரி இதழாக கொண்டு வருவதில் அவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பல்லாண்டு காலம் செயலாற்றிய அவர், 2001க்கு பிறகு மதுரை புறநகர், தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கம்பம் நகரில் உள்ள தமது இல்லத்தில் வசித்து வந்தார். அவரது கடைசிக் கால கட்டத்தில் கூட தீக்கதிர் பத்திரிகையும், அது மேலும் மேலும் வளர வேண்டும் என்ற எண்ணமும் அவரது நினைவுகளில் இருந்து அகலவில்லை.
தமிழகத்தில் மார்க்சிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றிய தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரதுமறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.அவரது மறைவால் வாடும் அவரது மகன் முகமது யாக்கோப் மற்றும் மகள்கள் சையது அலி பாத்திமா, வஹீதா பேகம், ஜெயிலா பேகம் உள்ளிட்ட உறவினர்களுக்கும், கட்சியின் தேனி மாவ
ட்டக்குழு தோழர்களுக்கும் மாநில செயற்குழு இதயப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)