கே.பாலகிருஷ்ணன் சாடல்
கிருஷ்ணகிரி, நவ. 5- குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஆர்எஸ்எஸ் குரலை எதிரொலிக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் கையெழுத்து இயக்கத்தை கிருஷ்ணகிரியில் புதனன்று (பிப்.5) தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் காவிரி காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 நாள் வேலை கூலி பாக்கி ரூ.1800 கோடி வழங்கப்படவில்லை. மத்திய அரசோ, இந்த திட்டத்திற்கான நிதியை உயர்த்துவதற்கு மாறாக கடுமையாக குறைத்துள்ளது. கிராமப்புற மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.71 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.61 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் முதலாளிகளுக்கு 195ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளித்துள்ளனர்.
குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய்யான குற்றச்சாட்டின் பேரில் உத்தரப்பிரதேசத்தில் அக்லக் என்ற அப்பாவி முஸ்லிம் கொல்லப்பட்டபோதும் கண்ணை மூடிக்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் இப்போது சிஏஏ-வுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் குரலில் பேசுகிறார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும்ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் போல் பேசி வருகிறார். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் இந்த அமைச்சர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ரஜினி மற்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோரது கருத்துக்கள் கடுமையான கண்டனத்திற்கு உரியவை. குடியுரிமை திருத்தச்சட்டம்,தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கான போராட்டம் தொடரும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். திமுக மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் தலைமை யில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் மற்றும் தோழமை கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.