tamilnadu

img

தரமான கல்வி அடிப்படை உரிமை- எம்.ஏ.பேபி பேச்சு

நாகர்கோவில், மே 26-நரேந்திர மோடி  ஆட்சியின் கீழ் கல்வி விற்பனை சரக்காக மாற்றப்பட்டுள்ளது மட்டுமல்ல; கல்வியில் வகுப்புவாதத்தை திணிக்கும் அபாயம் உண்மையாகிவிட்டது என எம்.ஏ.பேபி குற்றம் சாட்டினார்.அரசுப்பள்ளிகளை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க சைக்கிள்பேரணியை குமரி மாவட்டம் களியக்காவிளையில் சனிக்கிழமை துவங்கி வைத்து கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் எம்ஏ. பேபிமேலும் பேசியதாவது: கேரளத்தில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட்வகுப்புகள் உள்ளிட்ட மேம்பட்ட கட்டமைப்புகளும், தனியார் பள்ளிகளில் இருந்து மாணவமாணவிகள் அரசு பள்ளிகளை நோக்கி வருவதும் அங்கே முற்போக்கான இடதுசாரி ஆட்சி நடப்பதால் தான். கல்வி நிலையங்களுக்கு இடையில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், ஐந்து நட்சத்திர பள்ளிகள், பஞ்சமர் படிக்கும் பள்ளிகள்உள்ளன. இந்த வேறுபாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும். கல்வியில் ஜனநாயகத்தைஉருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்நாட்டில் மாணவர் சங்கம் போராடி வருகிறது. 

கல்வி விற்பனைச் சரக்கா?
தமிழ்நாட்டில் மாணவர் சங்கம் நடத்தும் இந்த இயக்கத்தை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் நடத்த வேண்டும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும்நூற்றுக்கணக்கான சைக்கிள் பேரணிகள் தில்லியை நோக்கிச் சென்று வகுப்புவாத மத்திய அரசிடம், கல்வி எங்கள் பிறப்புரிமைஎன முழங்கிட வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் போது சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; அதை எப்படி போராடியும் பெறுவோம்என நம் முன்னோர்கள் சொன்னார்கள். அதுபோல அனைவருக்குமான ஜனநாயகப்பூர்வமான, தரமான கல்வி இந்த நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளின், மாணவர்களின் உரிமை. இதை முன்வைத்து நீங்கள் நடத்தும்இயக்கங்களில் எல்லாம் ஒரு முன்னாள் மாணவர் சங்க ஊழியன் என்ற நிலையில் உங்களுக்கு துணை நிற்பேன். கல்வியை விற்பனைச் சரக்காக மாற்றுவது, கல்வியில் வகுப்பு வாதத்தை திணிப்பது,கல்வியை மத்திய அரசின் பிடியில் கொண்டுவருவது. இதுதான் மோடி அரசின் கொள்கை.கூட்டாட்சி முறையில் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளை ஒடுக்கி அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசுபறித்துக் கொள்கிறது.

கல்வியும் சுகாதாரமும் அடிப்படை உரிமைகள்
கல்வியும் சுகாதாரமும் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. இவற்றுக்கு ஒரு நாட்டின்ஒட்டுமொத்த ஜிடிபியில் இருந்து 6 சதவீதம்ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான் விஞ்ஞானப்பூர்வ நிலைப்பாடு என கோத்தாரிகமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் இது குறைக்கப்பட் டது. நரேந்திர மோடி ஆட்சியில் இது பாதியாக குறைக்கப்பட்டது. குறைந்த விகிதத்தில்இருந்து அதிகரிப்பதை விட்டு விட்டு மீண்டும்மீண்டும் குறைப்பதையே மன்மோகன் சிங் அரசைப் பின்பற்றி நரேந்திர மோடி அரசும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் எடப்பாடி அரசும்மக்கள் விரோத, கல்வி விரோத கொள்கையையே செயல்படுத்துகிறது. இதற்கு எதிரானபோராட்டத்தை நாம் முன்னெடுத்து செல் வோம். தேர்தல் முடிவில் தமிழகத்தில் இடதுசாரிகளுக்கு நான்கு இடங்கள் கொடுத்ததற்கு தமிழக மக்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறோம். தமிழகத்திற்கும் கேரளத்திற் கும் வகுப்புவாத சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் ஒற்றுமை உண்டு. ஆனால் அதை அங்கீகரிக்கும் அதே நேரத்தில், கேரளத்திலும், தமிழகத்திலும் வகுப்புவாதிகள் தேர்தலில் வெற்றி பெறமுடியாவிட்டாலும், ஆர்எஸ்எஸும், பாஜகவும் மக்களை பிளவுபடுத்தி வலுவாக காலூன்றதொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்ற முக்கியமான விஷயத்தை நாம்ஒருபோதும் மறக்கக்கூடாது. வகுப்புவாத சக்திகளின் முயற்சிகள் மீது நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும் வகுப்புவாத சக்திகளின்ஆபத்து உள்ளது. பாஜகவை தோற்கடித்தாலும் அந்த ஆபத்து இல்லை என்று நாம் தவறாக கணக்கிடக்கூடாது. வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை, மாணவர்சங்க போராட்டத்தின் ஒரு பகுதியாக நாம் காண வேண்டும். மக்கள் வகுப்புவாதத்தால் பிளவுபடுத்தப்பட்டால் என்ன கல்வி கிடைத்தும் பயனில்லை. இதை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

வைகுண்டரும் மார்க்சும்

நமது இரண்டு மாநிலங்களுக்கும் (தமிழகம், கேரளா) இடையில் புவியியல் ரீதியான சில வித்தியாசங்களை தவிர தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் பல பொதுவான அம்சங்கள் உள்ளன. அதில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் பொதுவான ஒரு அம்சம் நமது சமூகத்தை மாற்றுவதற்காக, முன்னோக்கி கொண்டு செல்வதற்காக வரலாற்றில் நடந்த போராட்டங்கள், இயக்கங்களில் நமக்கு பொதுவான பாரம்பரியம் உண்டு. தமிழகத்தின் ஒரு பகுதியான குமரி மாவட்டத்தில் சுவாமித்தோப்பு என்னும் இடம் உள்ளது. அங்கு அய்யா வைகுண்டரின் புரட்சிகர போராட்டங்களின் சின்னங்கள்  இந்த சுவாமித்தோப்பில்தான் உள்ளது. காரல் மார்க்ஸ்க்கும் சுவாமிதோப்பில் உள்ள வைகுண்டருக்குமிடையே உறவு ஒன்று உண்டு. காரல் மார்க்ஸ் சோசலிச சமூகத்தை நிர்மாணிப்பதற்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கு முன்பு முதலில் நீதிமக்களின் மன்றம் என்ற அமைப்பில் சேர்ந்தார். அப்படி ஒரு அமைப்பில் மார்க்சும் எங்கெல்சும் சேர்வதற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு சமத்துவ சமாஜம் என்ற அமைப்பை அய்யா வைகுண்டர் இங்கு உருவாக்கினார். ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மார்க்சுக்கு முன்பு வைகுண்டர் சுவாமிகள் எட்டியிருந்தார் என நாம் பெருமை கொள்ளலாம். அதற்கு காரணம் மார்க்சை விட அய்யா வைகுண்டர் 9 வயது மூத்தவர். சுவாமிதோப்பிற்குச் சென்றால் சமத்துவ கிணற்றை காணலாம். அந்த கிணற்றில் வெள்ளம் மட்டுமல்ல, ஒரு செய்தியும் உள்ளது. தீண்டாமையும், சாதி வேற்றுமையும் நிறைந்த அந்த காலத்தில் அந்த கிணற்றில் குளிப்பவர்கள் அனைவரும் சாதி வித்தியாசமோ, ஆண் பெண் வித்தியாசமோ இன்றி சமத்துவமாக குளிக்க வேண்டும் என்பது தான் அது.  தீண்டாமை என்ற அநீதிக்கும், கொடுமைக்கும் எதிரான சங்கம் இந்திய மாணவர் சங்கம். நாம் வரலாற்று அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். அசமத்துவத்திற்கெதிரான இயக்கத்தை மார்க்சும் எங்கெல்சும் உலகம் முழுவதும் துவங்கிய போது இங்கே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் துவங்கியவர் அய்யா வைகுண்டர். மாணவர்கள் சுவாமிதோப்புக்கு சென்று அங்குள்ள வரலாற்று பதிவுகளை அறிந்து கொள்ள வேண்டும்.