tamilnadu

img

ஓபிசி இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

மத்திய அரசு சட்டம் இயற்றவும் உத்தரவு

சென்னை, ஜூலை 27- மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பின ருக்கான இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மத்திய அரசு சட்டம் இயற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.  மருத்துவப் படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக  அரசு, திமுக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தன.

இதற்கு பதில்மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “உச்ச நீதிமன்றம் உத்தர விட்டால் 27 சதவிகித இடஒதுக்கீடு  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம். ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சத வீதத்திற்கு மிகாமல்  இருக்கவேண்டும்” என்று நிபந்தனை விதித்தது. அனைத்து தரப்பில் வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் திங்களன்று (ஜூலை 27) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உத்தரவு களை உச்சநீதிமன்றம் மட்டுமே பிறப்பிக்க முடியும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை நிராகரித்தனர்.

இட ஒதுக்கீடு வழங்க சட்டமோ அல்லது அரசியலமைப்போ தடையாக இல்லை  என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கு வதற்கான சட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்ற முடியும். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும். மாநிலங்கள் சமர்ப்பித்த இடங் களை பெற்றபோது, அவற்றில் மத்திய கல்வி  நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத மருத்துவக் கவுன்சில், மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறு வனங்களில் ஆட்சேபிக்க முடியாது. இந்திய  மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாநில  இடஒதுக்கீடு கூடாது என எந்த விதிமுறை யும் இல்லை” என்று குறிப்பிட்டனர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் அடங்கிய குழு வை அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் ஸ்டாலின் அபிமன்யு, உதயா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மகத்தான வெற்றி : கே.பாலகிருஷ்ணன்

மருத்துவ படிப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வழங்குகிற அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களில் இதுவரையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்தோம். இதன்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 50 சதவீதம் மற்றும் பட்டியலின மக்களுக்கான 18 சதவீதம், பழங்குடி மக்களுக்கான ஒரு சதவீதம் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திட வேண்டும். ஆனால் இந்த வழக்கில் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும், மாநிலங்களின் கொள்கைகளின்படி இடஒதுக்கீடு வழங்க முடியாது என வாதிட்டன. அதுமட்டுமின்றி, இதுபோன்ற இடஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டுமே வழங்க முடியும் என்றும், அப்படியே இடஒதுக்கீடு வழங்கினாலும் மொத்தம் 50 சதவீதமே இடஒதுக்கீடு என்ற வரம்பை தாண்டமுடியாது என்றும் ஏடாகூடமான வாதங்களை முன்வைத்தன. இதற்கு மாறாக, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் 69 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய நிலையில்,  பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் 27 சதவீத இடஒதுக்கீடு அளித்தால் போதும் என்ற வாதத்தை முன்வைத்தது.

தற்போது உயர்நீதிமன்றம் இந்த பிரச்சனையை தெளிவுபடுத்திவிட்டது. அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள கொள்கையின்படி மத்திய அரசு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்; அதேபோல, தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை மறுப்பதற்கான விதிகளோ, வழிகாட்டுதல்களோ மத்திய அரசின் அறிவிக்கைகளிலும் இல்லை; உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களிலும் இல்லை. எனவே, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும், 3 மாதகால அவகாசத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர், மத்திய அரசின் சுகாதார செயலாளர், இந்திய மருத்துவக் கவுன்சில் மூவரும் சேர்ந்து ஒரு குழுவாக இருந்து இந்தப்  பிரச்சனைக்கு முடிவு காண வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு ஒரு மகத்தான வெற்றியாகும். நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது. எனவே, 3 மாத காலம் காத்திராமல் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இடஒதுக்கீட்டை அமலாக்கு வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு சட்டப்படி இது அமலாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து...