முதல்வருக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சென்னை,மே 13- தரணி சர்க்கரை ஆலை 2018-19 ஆம் ஆண்டில் அரைத்த கரும்புக்கு விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.70 கோடி கரும்பு பணப் பாக்கியை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்), தியாகதுருகம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), வாசுதேவநல்லூர் (தென்காசி மாவட்டம்) ஆகிய மூன்று இடங்களில் செயல்படும் மூன்று தரணி சர்க்கரை ஆலைகள் 2018 -19 ஆம் ஆண்டில் விவசாயிகளிடம் ஒப்பந்தப்படி கொள்முதல் செய்த கரும்புக்கு ரூ.70 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். இதே போல தேனி மாவட்டத்தில் இயங்கும் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை ரூ.6.5 கோடி 2018 -19 ஆம் ஆண்டு கரும்புக்கான எப்ஆர்பி (FRP) பாக்கி வைத்துள்ளனர்.
கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 14 நாட்களில் விவசாயிகளுக்கு கொடுத்திருக்க வேண்டிய எப்ஆர்பி கரும்பு பணப் பாக்கியை 16 மாதங்கள் கடந்த பிறகும் விவசாயிகளுக்கு தரவில்லை. இதனால் தரணி சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளும் , தேனி ராஜஸ்ரீ ஆலைக்கு கரும்பு அனுப்பிய 3500 விவசாயிகளும் சிரமப்படுகின்றனர். கூட்டுறவு மற்றும் வங்கிகளில் வாங்கிய வட்டி இல்லா கரும்பு பயிர்க் கடனை குறிப்பிட்ட 15 மாதங்களில் கட்டாததினால் வட்டி, கூட்டு வட்டியை விவசாயிகள் செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே வாங்கிய பயிர் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விவசாயிகள் புதிய பயிர் கடனை பெற முடிய வில்லை. அடுத்தடுத்த சாகுபடிக்கும், குடும்பச் செலவுகளுக்கும் பணமில்லாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தரணி, ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகங்களுடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்திய பிறகும், மாவட்ட ஆட்சியர்கள் , மாநில சர்க்கரை துறை ஆணையர் உட்பட அதிகாரிகள் தரணி ஆலை உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் உடன் பேசிய பிறகும் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்பு பணப்பாக்கியை தர வில்லை. இத்தகு சூழலில் தமிழக முதல்வர் தலையிட்டு 13,500 கரும்பு விவசாய குடும்பங்களுக்கு தரணி, ராஜஸ்ரீ சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய 2018-19 ஆண்டு கரும்பு பண பாக்கி ரூ.76.5 கோடியை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.