சென்னை:
ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரி தொழில்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மனு அளித்துள்ளது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிசாமி , பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் , மாநிலச் செயலாளர் சி.பெருமாள் ஆகியோர் ஜூன் 16 புதன்கிழமையன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில், 2020-21 நடப்பு பருவத்தில் அரைத்த கரும்புக்கு சக்தி சுகர்ஸ், ராஜ ஸ்ரீ தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திட வேண்டும். நான்கு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை (எஸ்ஏபி) மாநிலத்திலுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகள் தரவில்லை. ரூ.1217 கோடி வரை எஸ்ஏபி பாக்கி உள்ளது. தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும்.
2020-21 பருவ கரும்புக்கு10 சதம் ரெக்கவரிக்கு ஒன்றிய அரசு டன்னுக்கு ரூ.2850 விலை அறிவித்துள்ளது. மாநிலத்தில் சர்க்கரை ஆலைகள் நடப்பு பருவத்திற்கு டன்னுக்கு ரூ.2707.50 வழங்கி வருகின்றன. நமதுமாநிலத்தில் மாநில அரசுசேர்த்து கொடுத்த தொகையும்சேர்த்து கடந்த 4 ஆண்டுகளாக ஒரே விலை டன்னுக்கு ரூ.2750 மட்டுமே பெற்று வருகின்றனர். 2020-21 நடப்புபருவத்திற்கு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை யாக ஒரு டன் கரும்புக்கு ரூ.142.50 கரும்பு விவசாயி களுக்கு மாநில அரசு நேரடி யாக வழங்கிட வேண்டும். சட்டப்பேரவை தேர்தலின் போது ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம்விலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள்.இது கரும்பு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி வரும் 2021-22 ஆண்டுக்கு (9.5 பிழிதிறன்) ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் விலை அறிவித்து வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.மாநிலத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கடன்சுமையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சர்க்கரைஆலைகள் சர்க்கரை விற்பனை செய்திட ஒன்றிய அரசு கோட்டா முறையை நிர்ப்பந்திப்பதால் ஆலைகள் உற்பத்தி செய்திடும் சர்க்கரையை விற்பனை செய்திட முடியாமல் சர்க்கரையை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் வாங்கி கரும்பு பண பாக்கியை விவசாயிகளுக்கு தருகிறார்கள்.கூட்டுறவு- பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும்தொகையை வட்டியாக கட்டியுள்ளனர். சர்க்கரை ஆலைகள் சர்க்கரை விற்பதற்கு ஒன்றிய அரசு கோட்டா முறையை செயல்படுத்து வதை தமிழ்நாட்டிற்கு ரத்து செய்திட வேண்டும் என ஒன்றிய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இந்த கோரிக்கை மனுவை மாநில சர்க்கரைத் துறை ஆணையரையும் சந்தித்து வழங்கினர்.