இளம்பிள்ளை, ஆக.11- விவசாயத்தோட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி சங்ககிரி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வழியாக தமிழகத்திலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் வரை விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 10 மடங்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அல்லது விவசாய நிலம் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்தாமல் சாலையோரமாக கேபிள்களை மண்ணில் பதித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி அருகே 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாய சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜேந்திரன், பெருமாள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.