திருச்சிராப்பள்ளி, மே 11-திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள இ.பி.ரோட்டில் சவுக்கு, மூங்கில் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூங்கில், சவுக்கு மரங்கள் லாரிகளில் வரும். இவற்றை லாரிகளில் இருந்து இறக்கவும். இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு அனுப்ப லாரிகளில் ஏற்றும் பணியில் சுமார் 20 ஆண்டுகளாக 45-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 17 நாட்களுக்கு முன் சவுக்கு, மூங்கில் பாரம் சுமக்கும் தொழிலாளி ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ 50 ஆயிரம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை கடை உரிமையாளர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து வேலை நேரத்தின் போது உணவு இடைவேளை வழங்க வேண்டும். பணியின் போது விபத்து ஏற்பட்டால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீண்ட காலம் வேலை செய்து உடல் நலக்குறைவால் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ 50 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சவுக்கு, மூங்கில் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் இ.பி.ரோட்டில் உள்ள சவுக்கு டெப்போ முன் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க(சிஐடியு) மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சவுக்கு, மூங்கில் பாரம் சுமக்கும் சுமைப்பணி தொழிலாளர் சங்க(சிஐடியு) தலைவர் ஏழுமலை, பொருளாளர் வெற்றி, செயலாளர் தங்கையன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் அன்வர், ஆசைதம்பி, கன்னிச்சாமி, பாண்டியன், செல்லமுத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.