செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை ஜான்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான மாற்றுத்திறனாளி மகேந்திரன் 25, கடந்த வெள்ளிக்கிழமையன்று உறவினர் ஈமக்கிரியைக்காக, அணைப்பட்டிக்கு சென்றிருந்தார். அன்று மாலை வீடு திரும்பிய மகேந்திரன், மயங்கி சுருண்டு விழுந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று இறந்தார்.
மாவட்ட போலீஸ் எஸ்.பி., சக்திவேல் உத்தரவின்பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., சீமைச்சாமி, மதுவிலக்கு டி.எஸ்.பி., பொன்னுச்சாமி, கொரோனா பிரிவுக்கான சிறப்பு டி.எஸ்.பி., சரவணன் ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
மகேந்திரன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, போதைக்காக நரம்புத்தளர்ச்சி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி தின்றது உறுதியானது. அதிக மாத்திரை பயன்படுத்தியதால், மகேந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இவருக்கு மாத்திரை வாங்கிக் கொடுத்த சித்தையன்கோட்டை யை சேர்ந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.