செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரங்களில் அதிகமாகக் காணப்பட்ட இந்நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக கிராமங்களிலும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சென்னைக்கு மிக அருகில் இருப்பதாலும், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதாலும் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், மேடவாக்கம், கீழ் கட்டளை, அனாகாபுத்தூர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலேயே முதலில் வேகமாகப் பரவியது. இதன் ஒருபகுதியாகவே கடந்த முறை அறிவித்த முழு ஊரடங்கில் சென்னைக்கு மிக அருகில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் சென்னை காவல் துறைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய வட்டங்களில் முழு ஊரடங்கிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்த நிலையில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவியது. குறிப்பாக மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களிலும், மதுராந்தகம் நகரிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களிலும், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 மருத்துவர்கள், 9 செவிலியர்கள், 4 பணியாளர்கள் என 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள் மருத்துவர்களும் தொற்றால் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் முன்களப் பணியாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதனால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
அண்மையில் மதுராந்தகம் வட்டார அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமார் தொற்றால் உயிரிழந்தது மருத்துவ பணியாளர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் 108 அவசர சிகிச்சை ஊர்தி பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களும், ஓய்வும் வழங்கப்படாத நிலை உள்ளது. மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது போல ஓய்வு வழங்க வேண்டும், தொற்று பரிசோதனை செய்வதில் ஏற்படும் தாமதத்தைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்திடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தொற்று ஏற்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி, சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் வழங்க வேண்டும். இவை அனைத்தும் வழங்கப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டு தொடர்கிறது. கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்குக் கூட தரமான முகக்கவசம் வழங்கப்படுவதில்லை.
செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து நகராட்சி பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பணியாளர்கள் தற்போது கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று உள்ளதா என வெப்பமானி வைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இவர்கள் யாருக்கும் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பும் பணியாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கிராமப் புறங்களிலிருந்து தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். அவ்வாறு பணிக்குச் செல்வதால் கொரோனாத் தொற்று அதிகளவில் கிராமங்களுக்குப் பரவும் நிலை உருவாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டக் குழுவின் சார்பில் இரண்டுமுறை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனாத் தொற்று கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மனுக்கள் மூலம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. குறிப்பாகத் தொழிற்சாலைகளில் தொற்றைக் கட்டுப்படுத்த தொழிற்சங்கம் அடங்கிய ஆலோசனை குழுக்களை அமைக்க வேண்டும், முன்கள பணியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை எடுத்துரைத்தும் நடவடிக்கை இல்லை.
நாளுக்கு நாள் அதிகரிப்பு
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட்தில் இதுவரையிலும் 14 ஆயிரத்து 534 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 ஆயிரத்து 129 பேர் குணமடைந்துள்ளனர். 248 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 248 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய பொதுமக்களும் சில நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுவது நீடிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல் துறை வாகனங்களைப் பிடிப்பதும், வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்வதும் மட்டுமே தனது கடமையாக வைத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் இ.சங்கர் கூறுகையில், நகர்ப்புற பகுதிகளில் தீவிரமாகத் தொற்று பரவும் போதே இரண்டு முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நோயைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகளை மனுக்கள் வாயிலாக தெரிவித்தும், அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கிராமங்களை நோக்கித் தொற்று பரவியுள்ளது. ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், தாலுகா மருத்துவமனைகளிலும் போதுமான மருத்துவர்களையும் மருத்துவ பணியாளர்களையும் நியமிப்பதுடன் முன்கள பணியாளர்களுக்கான போதிய பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும். பரிசோதனைகள், காய்ச்சல் முகாம்களை நடத்தி நோய்த்தொற்று உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
-பார்த்திபன்