tamilnadu

img

கொரோனாவும் ஆதிவாசி மக்களும் - பிருந்தா காரத்

பிருந்தா காரத் ( அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) )

வைரஸ் கிருமியை விட ஊரடங்கு நடவடிக்கையே ஆதிவாசி இன மக்களுக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரும்பாலான ஆதிவாசி மக்களின் குடியிருப்புப் பகுதிகள் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளா காமல் இருந்து வருகின்றன. 

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போர் என்பது இந்தியாவின் தொழிலாளர்களுக்கு – குறிப்பாக ஆதிவாசி மக்களுக்கு – எதிரான அறிவிக்கப்படாத போராக மாறி வருகிறது. தெலுங்கானாவிலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனது கிராமத்திற்கு நடந்தே  சென்ற ஜாம்லோ மக்தம் என்கிற 12 வயது புலம்பெயர்ந்த ஆதிவாசி சிறுமி,  தனது கிராமத்தை சென்றடைய சில கிலோமீட்டர் தொலைவுகளே இருந்தபோது பசியின் களைப்பினாலும், நீர்ச்சத்து குறைந்ததாலும் உயிரிழந்தாள்.  நாடு தழுவிய ஊரடங்கு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் ஆதிவாசி மக்கள் எத்தகைய இடர் பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதையே இச்சிறுமியின் இறப்பு சுட்டிக் காட்டுகிறது.  கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மோடி அரசு அறிவித்துள்ள போரா னது, இந்தியாவின் தொழிலாளர்களை இந்நாட் டின் குடிமக்கள் அல்லாதவர்கள் போல்  நடத்தி அவர்களுக்கு எதிரான அறிவிக்கப் படாத போராக மாறி வருகிறது.  ஆதிவாசி மக்கள் பகுதியினரும் இத்தகைய தொழி லாளர்களுக்குள் அடங்கியுள்ளனர்.

புலம் பெயர்தல் குறித்த முக்கியமான நுண்ணறிவு

மார்ச் மாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, இந்தியாவில் 10 கோடி புலம்பெயர்ந்த  தொழிலாளர்கள் இருப்பதாக ஓர் தோராய மான மதிப்பீட்டை அரசு அளித்திருந்தது.  எனினும், இவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்களாக ஆவணப்படுத்தப்படா மலும், பதிவு செய்யப்படாமலும் உள்ளார்கள் என்றும் ஒத்துக் கொண்டது.  இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் சமூக உள்ளடக்கம் குறித்து எந்த விவரமும் அரசி டம் இருக்கவில்லை.  1992-93 மற்றும் 2007-2008 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத் தில், புலம்பெயர்ந்த மொத்த தொழிலாளர் களின் எண்ணிக்கையில் பழங்குடியின மக்களின் விகிதாச்சாரம் வேறெந்த பிரி வினரைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது என புலம்பெயர்தல் குறித்து கடைசியாக மேற் கொள்ளப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு தெரி விக்கிறது.  இந்த ஆய்வறிக்கை 20 ஆண்டு களுக்கு முன் வெளியிடப்பட்டது.

புலம் பெயர்கிற பெண்களின் எண்ணிக்கையில் அதிக மானவர்களாக இருப்பதும் பழங்குடி யினத்தைச் சார்ந்தவர்களே என்று இதே  புள்ளி விவரம் தெரிவிக்கிறது.  அப்போதிருந்து, ஆதி வாசி மக்களில் விவசாயத்தை சார்ந்திருப்ப வர்களைக் காட்டிலும், உழைப்பைச்செலுத்திப் பெறும் ஊதியத்தை சார்ந்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமப்புற ஆதிவாசி மக்களில் 45.5% வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள போது, விவசாயிகளாக, விவசாயத் தொழிலாளியாக, வேலை தேடி புலம்பெயர்கிற தொழிலாளி உள்ளிட்ட விவசாயம் சாராத துறையில் தொழிலாளியாக என பொதுவாகவே ஆதி வாசி மக்கள் ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான வேலைகளை செய்கின்றனர்.  வர்த்தகம் செய்வதை சுலபமாக்குவது என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, ஆதிவாசி மக்கள் பகுதியினர் புலம்பெயர்வதும், தங்களது நிலங்களை இழப்பதும் அதிகரித்திருப்பதை கடந்த பல  ஆண்டுகளாக பார்க்க முடிந்துள்ளது.  அவர் களது நிலங்களும், காடு சார்ந்த வளங்களும் கையகப்படுத்தப்பட்டதால், புலம் பெயர் தொழிலாளர்களாக மாறும் ஆதிவாசி இனத்தை  சார்ந்த மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தன.  

ஆதிவாசி இன மக்கள் புலம் பெயரும் தன்மை இதர தொழிலாளர்களிலிருந்து மாறுபட்டதாக உள்ளது.  ஆதிவாசி இன மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும், பிற மாநிலங்களுக்கும் புலம் பெயர்வது என்பது குறுகிய காலத்திற்கு, பெரும்பாலும் பருவ காலங்களுக்கு ஏற்றவாறு, சுழற்சி முறை யிலானதாக உள்ளது.  பருவகாலத்தின்போது விவசாயத்திற்கும், கட்டுமான வேலை களுக்கும், செங்கல் சூளைகள் அல்லது நகர்ப்புற பகுதிகளில் உடலுழைப்பு தொழி லாளர்களாகவே ஆதிவாசி மக்கள் பிரதான மாக புலம் பெயர்கின்றனர்.  மீன்பிடி தொழி லுக்காக அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசி மக்கள் மகாராஷ்டிரத்திற்குப் புலம் பெயர் கிறார்கள்.  இது தவிர, ஆதிவாசி இனத்தைச் சார்ந்த இளம் பெண்கள் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாக நகர்ப்புற பகுதி களுக்குப் புலம் பெயர்கின்றனர்.  இதில் ஒப்பந்ததாரர்களின் பங்களிப்பும் பெரு மளவில் குறிப்பிடத்தக்கதாகும்.  ஆதிவாசி தொழிலாளர்களை குழுக்களாக குறிப்பிடப் பட்ட பணியிடத்திற்கு ஒப்பந்ததாரர்கள் வேலைக்கு அழைத்துச் செல்வது என்ற வகையிலேயே இவர்கள் புலம் பெயர்வது நடை பெறுகிறது.  பெரும்பாலும் இவர்களை வேலைக்கு அழைத்துச் செல்லும்போதே முன்பணமாக ஒரு தொகையை ஒப்பந்ததாரர் இவர்களுக்கு கொடுத்து விடுகிறார். இதன் பின், இத்தொழிலாளர்கள் ஒப்பந்ததாரரின் கொத்தடிமையாகவே நடத்தப்படுகிறார்கள்.

நாடு தழுவிய ஊரடங்கு நடவடிக்கை திடீ ரென திணிக்கப்பட்டபோது ஆதிவாசி மக்கள் புலம்பெயர்வது ஏற்கனவே துவங்கியிருந்தது.  ஒவ்வொரு மாநிலத்திலும், தாங்கள் செய்து வந்த வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவே அவர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் செய்து வந்த வேலைகளுக்கான முதன்மை எஜமானர்கள் பெரும்பாலும் இவர்களை அழைத்து வந்த ஒப்பந்ததாரர்களை கைவிட்ட னர். எனவே, இவர்களுக்கு எதுவும் அளிக்காது தவிக்க விட்டு விட்டு ஒப்பந்ததா ரர்கள் ஓடிப் போய்விட்டனர். இத்தேசத்தின் மைய நீரோட்ட கலாச்சாரம் என்று சொல்லப்படு பவற்றின் அங்கமாக இந்த ஆதிவாசி இனத்தைச் சார்ந்த புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் இருப்பதில்லை.  எனவே, அரசு இயந்திரத்தைச் சார்ந்தவர்கள், குறிப்பாக காவல்துறையினர் ஏழை மக்களின்பால் பகைமை பாராட்டும்போது அதற்கு பெரு மளவில் பலியாகுபவர்களாக இம்மக்கள் உள்ளனர்.  ஊரடங்கு நடவடிக்கையின்போது, உதவிகளைப் பெற முடியாததோடு, சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இலவசமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில், இந்திய நாடு முழுவதிலும் ஆதி வாசி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களை நோக்கி நீண்ட, வலி மிகுந்த நடைபயணத்தைத் துவக்கினர்.  காவல்துறையினரை தவிர்த்திட, இப்பயணம் பெரும்பாலும் நெடுஞ்சாலைகளைத் தவிர்த்த தாகவும், காடுகள் வழியாகவும், குறுக்குச் சாலைகளின் வழியாகவுமே இருந்தன. 

சட்டமும் உரிமைகளும்

மாநிலங்களுக்கிடையே புலம் பெயர்ந்த தொழிலாளர் நலச் சட்டம், 1979 என்பது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கென்று இருக்கின்ற ஒரே சட்டமாகும்.  தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது என்ற தனது நிகழ்ச்சி நிரலின் பகுதியாக இந்த சட்டத்தை  பயனற்றதாக ஆக்குவதற்கான நடவடிக்கை களை மோடி அரசு துவக்கியுள்ளது. உழைக்கும்  வர்க்கம் அரும்பாடுபட்டு பெற்ற உரிமைகளை அழிப்பதற்கான கருவியாக உள்ள தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்போடு இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்டமும் இணைக்கப்பட உள்ளது.  தானாக புலம் பெயர்கிற தொழிலாளர்களை விலக்கி விட்டு ஒப்பந்ததாரர் மூலமாக புலம் பெயர்கிற தொழிலாளர்கள் பற்றி மட்டுமே 1979ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது என்பதால் இச்சட்டம் முழுமை யானதல்ல.  எனினும், இச்சட்டத்தின் அமலாக்கம் ஒப்பந்ததாரர் மூலம் பணிக்க மர்த்தப்பட்ட ஆதிவாசி இனத்தைச் சார்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இச்சட்டத் தின் கீழ் கூலியும், சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல இலவசமாக பயண ஏற்பாடுகளும் கிடைப்பதை உத்தரவாதம் செய்திருக்கும்.  சொல்லப்போனால் சட்டப்படி, ஊரடங்கு நடவடிக்கையை அரசு அறிவித்ததன் காரண மாக இத்தொழிலாளர்கள் வேலை யிழந்ததால், இவர்களுக்கு போக்குவரத்து வசதி இலவச மாகக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டியது மத்திய அரசின் சட்டரீதியான பொறுப்பாகும்.  

துயரத்திற்கான காரணம்

ஊரடங்கு காலத்தில் 2 மாத காலம் வேலை எதுவுமின்றி அல்லல்பட்ட பின்னர், ஆதிவாசி இனத்தைச் சார்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கையில் சல்லிக்காசு கூட இல்லாமல் தங்களது வீடுகளுக்குத் திரும்பு வார்கள். ஆனால், அரசு அறிவித்துள்ள உதவித் திட்டங்கள் எவற்றிலும் இவர்கள் ‘இடம் பெற வில்லை’.  ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதி களில், குறிப்பாக மலைப்பகுதிகளில், பொது  விநியோகத் திட்டத்தின் செயல்பாடு பொது வாகவே ஒழுங்குமுறையின்றி இருக்கும்.  தற்போது, ஊரடங்கு காலகட்டத்தில், ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிகள் பலவற்றில் பசி, பட்டினியின் அச்சுறுத்துகிற நெருக்கடி நிலையை ஏற்படுத்தி வருவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.  100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலைகளை அளிப்பதற்கான அனுமதியை ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்துதான் மத்திய அரசு அளித்தது.  சத்தீஸ்கர் மாநிலம் நீங்கலாக ஆதிவாசி மக்க ளின் பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் எந்த வொரு வேலையும் தற்போது இல்லை.  ஆதர வற்ற நிலையிலிருந்து மக்கள் பிரிவினரை பாதுகாக்க வேண்டுமெனில் இத்திட்டத்தின் கீழ்  வேலைகள் உடனடியாகத் துவங்கப்படுவது அவசியமாகும்.  விவசாயம் சார்ந்த நட வடிக்கைகளோடு மட்டுமின்றி சிறிய அளவில் காடு சார்ந்த பொருட்களை சேகரிக்கவும் 100 நாள் வேலைத்திட்டத்தை இணைத்திடலாம், இணைத்திட வேண்டும்.  இத்தகைய வேலை யை பிரதானமாகச் செய்திடும் ஆதிவாசி பெண்களுக்கு அளிக்கப்படும் கூலி மானிய மாக அமைந்திடுவதோடு, அவர்களது துயரைத் துடைத்திடவும் உதவிடும்.   சிறிய அள விலான காடு சார்ந்த பொருட்களுக்கான விலை களை உயர்த்தி அரசு அறிவிப்பினை வெளியிட்டபோதும், இவற்றை கொள்முதல் செய்வதற்கான மையங்கள் இல்லாதபோது, அடிமாட்டு விலைக்கு இடைத்தரகர்களுக்கு விற்பதால் இவர்களுக்கு சொற்பத் தொகையே கிடைக்கிறது அல்லது எந்த வருமானமும் இல்லாது போகிறது. 

வைரஸ் கிருமியை விட ஊரடங்கு நடவடிக்கையே ஆதிவாசி இன மக்களுக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரும் பாலான ஆதிவாசி மக்களின் குடியிருப்புப் பகுதி கள் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளா காமல் இருந்து வருகின்றன.  ஆனால், இப்பகுதிகளில் சுகாதாரக் கட்டமைப்பு வசதி கள் மிக மோசமாக இருப்பதால் புலம்பெயர்ந்த ஆதிவாசி இன மக்கள் தங்களது வீடு களுக்குத் திரும்புகிறபோது அவர்களது நிலை  என்னவாகும் என்பது பெரும் கவலையை அளிப்பதாக உள்ளது. 

பழங்குடியின மக்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் ஆதிவாசி மக்கள் பகுதிகளில் உள்ள பற்றாக்குறை பற்றிய புள்ளிவிவரங்களைக் கொண்டதாக உள்ளது.  20.7% பகுதிகளில் துணை சுகாதார மையங் களும் 26% பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையங்களும், 23% பகுதிகளில் சமூக சுகாதார மையங்களும் உள்ளன என அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.  மருத்துவர்களின் எண்ணிக்கையில் காணப்படும் பற்றாக்குறை என்பது 27% என்ற அளவில் உள்ளது.  

இப்பகுதிகளில் பல கனிமவளம் மிகுந்ததாக உள்ளன.  கனிமவளங்களை சுரங்கம் அமைத்து  தோண்டி எடுப்பதால் பாதிக்கப்படும் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் மாவட்ட கனிமவள உதவி நிதி ரூ.35,925 கோடி என்ற அளவில் உள்ளது.  இந்த ஆண்டு ஜன வரி மாதம் வரை இத்தொகையில் 35% மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.  அதுவும் கூடி சுரங்க நிறுவனங்களுக்கு உதவிடக் கூடிய கட்ட மைப்புகளை ஏற்படுத்துவதற்கே செல விடப்பட்டுள்ளன.  கோவிட்-19 நோய் தடுப்பு தொடர்பான செலவினங்களுக்கு இந்நிதி யைப் பயன்படுத்திக் கொள்ள மோடி அரசு  தன்னிச்சையாக அனுமதித்துள்ளது.  ஆனால் இந்த இரண்டு மாதங்களில், ஆதிவாசி இன மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை.  

பாதிப்பை ஏற்படுத்தும் தீர்ப்பு

ஆதிவாசி இன மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான சூழலை கையாள்வதற்குப் பதிலாக, அரசியல்  சாசனத்தின் கீழ் மற்றும் சட்டப்பூர்வமாகவும் ஆதிவாசி மக்கள் பெற்றுள்ள உரிமைகளை நேரடியாக நீர்த்துப் போகச் செய்யும் தளங்கள் உள்ளிட்ட தனது கார்ப்பரேட் ஆதரவு  நிகழ்ச்சி  நிரலை முன்னெடுத்துச் செல்ல ஊரடங்கு கால நிலையை மோடி அரசு  பயன்படுத்திக் கொண்டுள்ளது.  இந்த கால கட்டத்தில்தான், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 5ஆவது அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகளில் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் ஆதிவாசி இன மக்க ளுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நடைமுறைக்கு எதிரான மிகுந்த ஆட்சேபகர மான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.  இடஒதுக்கீடு பிரச்சனையைத் தாண்டி 5ஆவது அட்டவணையின் கீழ் ஆதிவாசி இன மக்க ளுக்குக் கிடைத்து வரும் சிறப்பு அரசியல் சாசன விதிகளின் மீது இத்தீர்ப்பின் பல அம்சங்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திடும்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நிலை  காரணமாக போதுமான அளவில் எதிர்ப்பியக்கங் கள் இல்லை என்பதால் இப்பிரச்சனைகளில் எல்லாம் ஆதிவாசி இன மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று அர்த்தமல்ல.      

 - தமிழில் : ராகினி