வாரியக்கூட்டத்தில் முடிவு
சென்னை, ஜன. 29- ஒப்பந்தத் தொழிலாளர்களை தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டத்தின்கீழ் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 78-வது கூட்டம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில் புதனன்று (ஜன.29) சென்னையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா.நந்தகோபால், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வி.பி.பி.பரமசிவம், நிர்வாகத் தரப்பில் கே.மாணிக்கம் (இஎப்எஸ்), கே.எம்.ஜி. கணேஷ் (சைமா), ஆர்.இராதாகிருஷ்ணன் (ஏஐஎம்), தொழிலாளர் தரப்பில் தாடி.ம.ராசு, எம். அப்துல் ஹமீது (ஏடிபி), டி.எம். மூர்த்தி (ஏஐடியுசி), வி.குமார் (சிஐடியு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ப்ரீகேஜி முதல் 5ம் வகுப்புக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயும், 6-8ம் வகுப்பு வரை இரண்டாயிரம் ரூபாயும், 9, 10ம் வகுப்புக்கு மூவாயிரம் ரூபாயும் உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட அளவிலான உள், வெளி அரங்க விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதிபெறும் மாணவர்களுக்கு 6-8ம் வகுப்பு மூவாயிரம் ரூபாயும், 9-12ம் வகுப்பு வரை ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பெறுவோருக்கு 30 ஆயிரம் ரூபாயும், 3ம் இடம் பெறுவோருக்கு 20 ஆயிரம் ரூபாயும் உதவித் தொகை வழங்குதல், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி உதவித் தொகை வழங்குதல் போன்ற முடிவுகளும் இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சென்னை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள ஜீவா இல்லம், இணைப்புக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, தொழிற்சங்க மகளிர் தங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட பகுதியை அமைச்சர் திறந்து வைத்தார். தமிழ்நாடு தொழிலாளர் நல நிதியினை இணையதளத்தின் வாயிலாக செலுத்துவதற்கு ஏதுவாக https:\\lwb.tn.gov.in என்ற இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.