ஜாஜர்:
ஹரியானாவில், காங்கிரஸூக்கு ஓட்டு போட்டதற்காக சொந்த சகோதரரையே பாஜக ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலம் ஜாஜர் அருகே உள்ள சய்லானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. பாஜக ஆதரவாளர் ஆவார். இவர், கடந்த மே 12-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது, பாஜகவிற்கு ஆதரவாக வேலை செய்துள்ளார். அப்போது, தனது ஒன்றுவிட்ட சகோதரர் ராஜா என்பவரிடம் பாஜக வேட்பாளருக்கு ஓட்டு போடும்படி தர்மேந்திரா நிர்ப்பந்தம் செய்துள்ளார். ஆனால், நிர்ப்பந்தத்தையும் மீறி, ராஜா காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கொலைவெறி தலைக்கேறிய தர்மேந்திரா, திடீரென பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜாவை நோக்கிச் சுட்டுள்ளார். இதில், ராஜா படுகாயமடைந்துள்ளார். ராஜாவின் தாயாரும் துப்பாக்கிச் சூட்டில் லேசான காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து தர்மேந்திரா தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
போலீசார், ராஜாவையும், அவரது தாயாரையும் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.