ஹரியானாவில் கிரிக்கெட் விளையாடிய 4 இஸ்லாமியர்களை அவர்களது வீட்டுக்குள் புகுந்து 30க்கும் மேற்பட்டவர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமின் போண்ட்ஸி பகுதியில் ஹோலியன்று இஸ்லாமிய இளைஞர்கள் கிரிக்கெட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஹாக்கி ஸ்டிக், இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக் கட்டைகள் கொண்டு தாக்கியுள்ளனர் .இந்த தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவில், ”இங்க இருக்காதீங்க.. பாகிஸ்தான் போங்க..” என தாக்குதல் நடத்தியவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போண்ட்ஸி காவல் துறையினர், 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதவி ஆணையர் சாம்ஷர் சிங் கூறுகையில், குருகிராமின் பூப் சிங் நகரில் உள்ள இஸ்லாமிய குடியிருப்புக்குள் உள்ளே புகுந்து ஹோலி கொண்டாடிய கும்பல், வீட்டிற்கு வெளியே கிரிக்கெட் விளையாடியவர்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஹாக்கி ஸ்டிக், இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக் கட்டைகள் கொண்டு தாக்கியுள்ளனர் . இந்த தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இஸ்லாமியர்களை தாக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது முரட்டுத்தனமானது.. கண்டிக்கத்தக்கது என்றும் தேர்தல் நேரத்தில் பாஜக நடத்தும் நாடகம், என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் "ஒவ்வொரு தேசபக்தி கொண்ட இந்தியரும் குருகிராம் நகரில் நடந்த இஸ்லாமிய குடும்பம் தாக்குதல் வீடியோவைக் கண்டு அவமானம் கொள்ள வேண்டும். ஆர். எஸ்.எஸ் மற்றும் பாஜக வெறுப்பு அரசியலையும் மதவெறியையும் பரப்பி வருகிறது. சமூகத்தின் இருண்ட பக்கத்தையும் நடைபெற உள்ள அபாயகரமான பின் விளைவுகளையும் இந்த பதிவு நமக்கு சுட்டி காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்