இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் சமர்ப்பித்துள்ள பட்ஜெட் என்பது பாலின சமத்துவத்தை நேசிப்பவர்களுக்கு இனிய செய்திதான். ஆனால் பட்ஜெட் இனிப்பானதா என்பதே அதன் உள்ளடக்கம் எழுப்புகிற கேள்வி. பட்ஜெட் உரையில் பெண்களுக்கான நீதி பற்றி உருக்கமாக “பறவைகள் ஒரு சிறகை மட்டும் அசைத்து பறக்க முடியுமா” என்று உருக்கமாக கேட்டுள்ளார். 33 சதவீத மகளிர் மசோதாவை இவ்வளவு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இருந்தும் கடந்த ஐந்தாண்டுகளாக ஏன் நிறைவேற்றவில்லை என பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆகவே இனிமையாக பேசுவது என்பது வேறு. ஆனால் நடைமுறையில் கசப்புதான் மிஞ்சுமென்றால் பேச்சை எப்படி ரசிக்க முடியும். இதுவே பட்ஜெட் முன்மொழிவுகளிலும் பிரதிபலித்துள்ளது. பளபளக்கிற பலூன்களை நிதி அமைச்சர் பறக்க விட்டுள்ளார். ஆனால் அதன் உள்ளே இருக்கிற அமசங்கள் கூர்மையான ஊசி போல பலூன்களை துளைக்கின்றன.
வளர்ச்சி என்கிற வண்ண பலூன்
2024-25 ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிரில்லியன் என்றால் லட்சம் கோடி. அதுவும் டாலர் மதிப்பில் என்றால் கிட்டத்தட்ட 350 லட்சம் கோடியை இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடும் என்று அர்த்தம். இந்த ஜி.டி.பி வளர்ச்சி என்பது எல்லோருக்குமான வளர்ச்சி என்பதல்ல. ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்த காலங்களில் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகமாக இருந்தன என்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இப்போது கூட இவர்கள் 5 ட்ரில்லியன் கனவு காண்கிற வேளையில் விவசாய வளர்ச்சி விகிதம் 2.89 சதவீதம் என்கிற மிகக் குறைவான அளவை எட்டியுள்ளது. இது பா.ஜ. க ஆட்சி ஐந்தாண்டுகளில் தந்த பரிசு. 2014 ல் விவசாய வளர்ச்சி விகிதம் 4.27 ஆக இருந்தது. இருந்தாலும் இந்த 5 ட்ரில்லியன் கனவுக்கே வருவோம். இந்த அளவை எட்ட ஒவ்வோர் ஆண்டும் 8 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும். பொருளாதார சர்வே 7 சதவீத வளர்ச்சிதான் என முதல் நாள் கூறுகிறது. மறு நாள் பட்ஜெட்டில் 8 சதவீத வளர்ச்சி உள்ளதென்று நிதியமைச்சர் அறிவிக்கிறார். எக்கானமிக் டைம்ஸ் தலைப்பு செய்தி கட்டுரையை இன்று (06.07.2019) எழுதியுள்ள பிரபல பொருளாதார ஆய்வாளர் சுவாமிநாதன் எஸ். அங்களேஸ்வர ஐயர் “ ஒரே நாளில் எப்படி ஜி.டி.பி ஒரு சதவீதம் தாவிக் குதித்தது? என்று கேட்டுள்ளார். இன்னமும் சொல்வதானால் 2019 ன் கடைசி காலண்டில் 5.8 சதவீத வளர்ச்சியே இருந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு மூலதன செலவுகளை அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்த பட்ஜெட், ஜி.டி.பியில் 1.6 சதவீதம் மட்டுமே மூலதன செலவுகளுக்காக ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் எந்த உயர்வும் இல்லை. சாதாரண மக்களின் நுகர்வும், வசதி படைத்தோரின் நுகர்வும் ஒரு சேர வீழ்ச்சி அடைந்துள்ளது. அதுவும் கடைசி காலண்டில் (2019) 7.2 சதவீத வளர்ச்சியே இருந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் இதுவே 9.8 சதவீதமாக இருந்தது. கார் விற்பனை ஜனவரி 2019 ல் (-) 2.7 சதவீத வீழ்ச்சி. அடுத்தடுத்த மாதங்களில் இது அதிகரித்து மே 2019 ல் (-) 26 சதவீத வீழ்ச்சி. தனியார் முதலீட்டை நமபியே நெடுஞ்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு முதலீடுகளுக்கு ஒதுக்கீடு இல்லை. கோத்ரெஜ் சேர்மன் ஆதி கோத்ரெஜ் கூறுகையில் “ இது வளர்ச்சி பட்ஜெட் அல்ல” என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வளர்ந்தாலும் அது மக்களுக்கு போய் சேருமா என்பது முக்கிய கேள்வி. இவர்கள் சொல்கிற வளர்ச்சியே சாத்தியமா என்பதும் கேள்வி.
வரி பலூன்
2009 தேர்தலின் போதே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருமானவரி விலக்கு வரம்பை ரூ 5 லட்சம் ஆக்குவோம் என்று பா.ஜ.க மேடைகளில் பேசப்பட்டது. 2014 ல் இருந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வரி முன்மொழிவுகள் வாசிக்கப்படும் போது நடுத்தர வர்க்கத்தினர் இதயங்கள் படபடக்க கேட்பார்கள். ஆனால் நடக்கவில்லை. இந்த முறையும் அழகு தமிழில் புறநானூறு பேசிய புதிய நிதியமைச்சர் 5 லட்ச வாக்குறுதியை மட்டும் மறந்து விட்டார். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் உச்ச வரம்பு உயர்ந்து விட்டது. ரூ 250 கோடிகள் வரை மட்டுமே 25 சதவீத கார்ப்பரேட் வரி என்பது ரூ 400 கோடி வரை என்று மாற்றப்பட்டு விட்டது. அதாவது இவர்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து ஒரே அடியில் 5 சதவீத சலுகை. மொத்த நிறுவனங்களில் 99.3 சதவீதத்திற்கு இந்த சலுகை விரிவாக்கப்பட்டு விட்டது என்றால் பாருங்கள். ஆனால் சூப்பர் ரிச் மீது சர்சார்ஜ் அதிகரிப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு “ராபின் ஹுட் டேக்ஸ்” என்பது வணிக இதழ்கள் சூட்டியுள்ள பெயர். குடம் குடமாக சில வணிக இதழ்கள் கண்ணீர் விட்டுள்ளன. உண்மையில் 74983 பேர்தான் ஒரு கோடி முதல் 5 கோடி வரை வருமானம் காட்டுகிறார்கள். 5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளதாக 6361 பேர் மட்டுமே கணக்கு காண்பிக்கிறார்கள். இது சந்தேகத்திற்குரிய என்ணிக்கை. 1 கோடிக்கும் 5 கோடிக்கும் இடைப்பட்ட வருமானம் பெறுகிற 74983 பேரிலும் பெரும்பான்மையோர் 1 கோடிக்கும் இரண்டு கோடிக்கும் இடைப்பட்டவர்களே. அவர்களுக்கு இந்த சர் சார்ஜ் உயர்வு கிடையாது. இதனால் ஐந்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் வரி விகிதம் 37 சதவீதத்தை தொட்டு விட்டது, இது உலகில் மிக அதிகம், இது தொழிலதிபர்களின் முனைப்பை பாதிக்கும் என்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். ஆனால் உண்மை என்ன ஜெர்மனியில் 2 கோடி வருமானம் உள்ளவர்களுக்கே 45 சதவீத வரி. ஜப்பானில் 2.5 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு 45 சதவீத வரி. பிரிட்டனில், சீனாவில் உச்ச பட்ச வரி 45 சதவீதம். ஆகவே தொழிலதிபர்கள் காண்பிப்பது செல்ல கோபம். தேர்தல் பத்திரங்களில் 95 சதவீதத்தை ஆளுக்கும்கட்சிக்கு கொடுத்தவர்களுக்கு கோபம் வராதா? ஆனால் பெட்ரோல் டீசல் விலைகளை ரூ 2 உயர்த்தி விட்டார்கள். ஜனவரி 1 ல் இருந்து இதுவரை பெட்ரோல் ரூ 1.67 ம், டீசல் ரூ 1.86 மே உயர்ந்திருந்தது. தேர்தல் காலம் என்பதால் பதுங்கியிருந்து இப்போது பட்ஜெட் மூலம் பாய்ந்திருக்கிறது. இதுவே வருமான திரட்டலில் பட்ஜெட் காட்டியுள்ள பாரபட்சம்.
ஆதார தொழில் பலூன்
அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் ரயில்வே மேம்பாட்டிற்கு 50 லட்சம் கோடி என பட்ஜெட் பெரும் பாய்ச்சலை காட்டியுள்ளது. வாய் பிளந்து கேட்பவர்களுக்கு அடுத்து என்ன மனதில் வரும்? எங்கே போவார்கள் இந்த நிதி ஆதாரத்திற்கு என்பதுதானே! நிதி அயோக்கின் 100 நாள் சாலை வரை படம் ஏற்கெனவே சொன்னதுதான். தனியார் முதலீட்டை ஊக்குவிப்போம். ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் எக்கானமிக் டைம்ஸ் (06.07.2019) நேர்காணல் கண்டுள்ளது. அதில் ஒரு கேள்வி. இப்படி தனியார்களை அனுமதித்தால் ரயில் கட்டணங்கள் உயராதா? அதற்கு அமைச்சரின் பதில் தெளிவானது. “அது நுகர்வோர் தெரிவு. நாங்கள் யாரையும் தனியார் சேவையை பயன்படுத்த சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டோம்” என்ன அர்த்தம்! கட்டணங்கள் கூடும். ஏறினால் ஏறுங்கள் என்பதுதான். ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு பெருமளவு நிதியை திரட்டி தருபவை ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களே. எல்.ஐ.சி மிகப் பெரும் ஊற்றாக உள்ளது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி உயர்ந்துள்ளது. ரயில்வே நான்காண்டுகளுக்கு முன்பு 1.5 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது என்றவுடன் ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு 30000 கோடி தருகிறோம் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது எல்.ஐ.சி. ஆனால் அந்த வருவாய்க்கு ஜி.எஸ்.டி மூலம் வழி மறிப்பது ஏன்? தனியார் முதலீட்டை நம்பியிருப்பது ஏன்?
பொதுத் துறை பலூன்
இந்த பட்ஜெட் பொதுத் துறையின் மென்னியை நெறிப்பதாக உள்ளது. பொதுத் துறை பங்கு விற்பனைக்கு ரூ 1,05,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பொதுத் துறை நிறுவனங்கள் குறி வைக்கப்பட்டுள்ளன. எல்லா செபி (SEBI) பட்டியல் நிறுவனங்களின் தொழில் முனைவோர்களும் 65 சதவீதத்திற்கு மேல் பங்கு வைத்திருக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் கோடி வணிகம் பங்கு சந்தைக்கு வரும் என்கிறார்கள். டி. சி.எஸ், இந்துஸ்தான் லீவர், விப்ரோ போன்றவை இதில் அடங்கும். ஆனால் இப் பட்டடியலில் கோல் இந்தியா போன்ற பொதுத் துறை நிறுவனங்களும் வரும். 51 சதவீத அரசு பங்குகள் இருக்கிற மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் இனி அரசு நிறுவனங்களின் பங்குகளும் சேர்ந்து 51 சதவீதம் இருந்தால் போதுமாம். உதாரணமாக ஒரு நிறுவனத்தில் அரசுக்கு 51 சதவீதம், எல்.ஐ.சிக்கு 20 சதவீத பங்குகள் இருந்தால் இனி அரசு 31 சதவீதம் வைத்திருந்தால் போதும். 20 சதவீத பங்குகளை விற்று விடலாம். பொதுத் துறை நிறுவனங்களின் கேந்திர விற்பனையும் இனி துவங்கும். அதாவது ஒரே தனியாருக்கு 26 சதவீத பங்குகள் விற்கப்பட்டு விடும்.இது வாஜ்பேய் காலத்தில் பெரும் சர்ச்சைக்கு ஆளான தனியார் மய வழிமுறை. ஏர் இந்தியாவில் துவங்கி இன்னும் பல நிறுவனங்கள் தனியாருக்கு ஒரே அடியில் தாரை வார்க்கப்படும்.
அந்நிய முதலீட்டு பலூன்
இந்த பட்ஜெட் அந்நிய முதலீட்டிற்கு அகலமாய் கதவுகளை திறந்து விட்டுள்ளது. 100 சதவீத அந்நிய முதலீட்டை இன்சூரன்ஸ் இடை நிறுவனங்களில் அனுமதிப்பதென்று முடிவு. இது அரசு, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை நேரடியாக பாதிக்காது. ஆனால் இடைத் தரகு வணிகம், மூன்றாம் நபர் காப்பீட்டு நிறுவனங்கள், மதிப்பீட்டாளார்கள், இழப்பு கணிப்பாளர்கள் போன்றோருக்கு பொருந்தும். பாலிசி பஜார், அமேசான் போன்ற மின்னணு வணிக நிறுவனங்களுக்கு அடிக்கிறது யோகம். இது இந்தியாவில் இருந்து நிதி வெளியேறவும் வழி வகுக்கும். சிங்கிள் பிராண்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களில் இருந்த 30 சதவீத உள் சந்தை நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் போன்ற அந்நிய நிறுவனங்கள் 3 ஆண்டுகளாக போட்ட சண்டைக்கு அரசு கொடுத்துள்ள விலை. அந்நிய நிதி வரத்திற்கு ரியல் எஸ்டேட் துறை, ஆதார தொழில் வளர்ச்சி துறையின் கடன் பத்திரங்கள் திறந்து விடப்பட்டுள்ளன. இப்படி உள்நாட்டு சேமிப்புகளை வளர்ப்பதற்கு வழி செய்யாமல் அந்நிய நிதி வரத்தை சார்ந்திருப்பது கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு சுண்ணாம்புக்கு அலைவதே ஆகும்.
பசவேஸ்வரா பலூன்
12 ஆம் நூற்றாண்டு துறவி பசவேஸ்வரா கருத்தை மிக உருக்கமாக நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். “செய்யும் தொழில் தெய்வம்; சமூகத்திற்கு திரும்ப நாம் தருவதும்தான்..” பட்ஜெட் கிராம மேம்பாடு, வேலை வாய்ப்பு, சிறு தொழில் வளர்ச்சி பற்றி பேசினாலும் அதன் உள்ளடக்கம் காலிப் பானையாகவே உள்ளது. 46 ஆண்டு இல்லாத வேலையின்மையை உருவாக்கியுள்ள அரசு அதற்கு பாவ மன்னிப்பு கேட்க வேண்டாம். ஆனால் இப்போதாவது நம்பிக்கை தருகிற முன் மொழிவுகளை பேச வேண்டாமா? மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ 61084 கோடிகளில் இருந்து ரூ 60000 கோடிகள் என குறைக்கப்பட்டுள்ளது. பண வீக்கத்தை சேர்த்தால் இந்த ஒதுக்கீடு ரூ 64000 ஆக இருந்திருக்க வேண்டும். சிறு தொழில்களுக்கு 59 நிமிடத்தில் கடன் கிடைக்கும் என்பது பெரிய வாய்ப் பந்தல். ஆனால் பொருளாதார ஆய்வறிக்கை 10 ஆண்டுகளில் 100 தொழிலாளர் என்ணிக்கையை தொடாத கம்பெனிகளுக்கு ஸ்டார்ட் அப் சலுகைகள் கிடைக்காது என எச்சரிக்கப்பட்டிருப்பது சிறு தொழில்களை குறி வைப்பதற்கா? எண்ணெய் வித்துகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள் நாட்டு உற்பத்தியை பாதுகாக்க வேண்டுமென்ற நியாயமான நீண்ட கால கோரிக்கைகள் எல்லாம் புறம் தள்ளப்பட்டுள்ளன. விவசாயம் வழக்கம் போல வார்த்தை ஜாலங்களோடு திருப்தி அடைய வேண்டும் போல. கடன், விலை, விதை, உரம் ஆகிய அடிப்படை கோரிக்கைகள் எதற்கும் தீர்வு இல்லை. விதை, உரம் விலைகள் மீதான கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வர தயாரில்லை. அதற்கான சிறு நகர்வு கூட இல்லை. “ஒரு தேசம் ஒரு சந்தை” என 585 மண்டிகளை தேசம் முழுக்க ஒன்றிணைக்கிற கனவுகள் கலைந்ததுதான் மிச்சம். விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை. இது குறித்தெல்லாம் பட்ஜெட் ஆக்க பூர்வமாக எதுவும் செய்யவில்லை. இப்படியாக பசவேஸ்வராவின் அறிவுரையை சாமானிய மக்களுக்கு மட்டும் தானம் செய்துள்ளார் நிதியமைச்சர்.
பட் படார்
பலூன்கள் வெடிக்கிற சப்தங்கள் கேட்கின்றன. கடந்த ஐந்தாண்டுகள் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லீயின் பெயரை ஒரு முறை கூட இரண்டு மணி நேர உரையில் நிதி அமைச்சர் உச்சரிக்கவில்லை. *இதுதான் வெடித்த பலூன்களிலேயே பெரிய பலூன்.*