4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசன் இங்கிலாந்து மற்றும் பிரிட்டனில் அங்கம் வகிக்கும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலிய கண்டத்தின் குட்டி நாடான நியூஸிலாந்து அணியும் கோப்பைக்காகப் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பையைக் கைப்பற்றியது இல்லை என்பதால், கோப்பையைக் கைப்பற்ற நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் தாக்குதல் பாணி ஆட்டத்தைக் கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுகளம் (லார்ட்ஸ்)
இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய மைதானங்களில் இதுவும் ஒன்று. பந்துகள் தாறுமாறாக எகிறும். ஸ்விங் சரிவர எடுபடாது. ஆடுகளத்தின் தன்மை அடிக்கடி மாறுபடும். சேசிங்கிற்கு ஒத்துழைக்காது என்பதால் டாஸ் வென்று பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
பரிசுத் தொகை
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 27 கோடி ரூபாய் (கோப்பை, பதக்கம்) இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாய் அரையிறுதியுடன் வெளியேறிய இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு 5 கோடி ரூபாய். லீக் சுற்றுடன் வெளியேறிய அணிக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.
மழை வருமா?
விடுமுறை நாளான ஞாயிறன்று லார்ட்ஸ் நகரின் வானிலை வெப்பம் சார்ந்ததாக இருக்கும். காலை 22 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் வெயில் அடிக்கும் என்றாலும், மதிய நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் சாரலுக்கு வாய்ப்புள்ளது.
உலகக்கோப்பை ஆதிக்கம்
மொத்த ஆட்டங்கள் - 9
நியூஸிலாந்து - 5
இங்கிலாந்து - 4
மலைக்க வைக்கும் டிக்கெட் விலை
பிரீமியம் டிக்கெட்டுகள் ரூ.13.78 லட்சத்திற்கும், இரண்டாம் லெவல் டிக்கெட்டுகள் ரூ.11.76 லட்சத்திற்கும் விற்கப்பட்டுள்ளன. டிக்கெட் விலை கேட்டாலே மயக்கம் வரும் போல் இருக்கிறது என்றாலும் இங்கிலாந்து, நியூஸிலாந்து ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு புக்கிங் செய்துள்ளனர். டிக்கெட் மறுவிற்பனையில் புக்கிங் செய்பவர்கள் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அங்கீகரித்துள்ள முகமைகளில் மட்டுமே டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். வேறு முகமைகளில் டிக்கெட் வாங்கினால் மைதானத்திற்குள் அனுமதி இல்லை என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெற்றி 50% 50% வாய்ப்பு
இடம் : லார்ட்ஸ்
நேரம் : பிற்பகல் 3 மணி
இரு அணிகளும் சமபலத்தில் இருந்தாலும் ஆளுக்கொரு பிரிவில் பலம், பலவீனத்தைப் பெற்றுள்ளன. இங்கிலாந்து அணி பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பந்துவீச்சில் சொதப்பி வருகிறது. நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரையில் பந்துவீச்சில் மிரட்டினாலும் பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் சரிந்தால் மிடில் ஆர்டரும் விரைவாகச் சரிகிறது. இதனால் இறுதிப்போட்டியில் வெற்றி, தோல்வியை எளிதாகக் கணிக்க முடியாது. இருப்பினும் சொந்த மண், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இங்கிலாந்திற்கு இருப்பதால் அந்த அணிக்குக் கோப்பையைக் கைப்பற்றச் சகல வாய்ப்புகளும் உள்ளது.
சேனல்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (அனைத்து இந்திய மொழிகளிலும்), டிடி ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (கணக்கு இருந்தால் இலவசம், இல்லையென்றால் 5 நிமிடம் மட்டும்), இந்திய வானொலி (சிறப்பு)