“வாழ்க்கையில் முன்னேற பாகுபாடுகளுக்கு எதிராக போராடு. வறுமைக்கு எதிராக போராடு. பெண் என்ற ஒரே காரணத்துக் காக மறுக்கப்படும் அத்தனை விஷயங்களுக்கு எதிராகவும் போராடு”. இது உன் பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கான போராட்டமும் கூட. இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்பது ஒரு விளையாட்டு வீராங்கனையின் அனுபவமாகும்.
அவர் யார்?
கால்பந்து உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மரடோனா, பிலே, ரொனால்டினோ ரோமாரியா வரிசையில் ‘பாவாடை அணிந்த பிலே’ என்று அழைக்கப்படுபவர் மார்தா. பிரேசில் நாட்டின் ஆலகோவாஸ் மாநிலம் டோரிஸ் ரியாக்கோஸ் என்கிற சின்னஞ்சிறு ஊரில் பிறந்தவர் மார்டா வியேரா டா சில்வா. குடும்பத்தில் இவர் தான் கடைசியாக பிறந்தவர். மூத்தவர்கள் ஜோஸ், வால்டிர், ஆஞ்சலா. இவரது குடும்பத்தைப் போன்றே அந்த கிராமமும் ஏழ்மையான நகரமாகும். மார்தா பிறந்த சில மாதங்களிலேயே அவரது தந்தை ஆல்டோரியோ அம்மாவை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். குடும்ப பாரத்தை முழுக்க முழுக்க அம்மா தெரசாவே சுமந்தார். பெண் குழந்தைகளையும் வளர்க்க அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
எங்களாலும் முடியும் !
பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த மார்டா, தெருக்களில் கால்பந்து விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்துப் பார்த்து தானும் அதே போன்று விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டால். ஆனால் கால்பந்து விளையாட்டில் பெண்களுக்கு அனுமதி கிடையாது இதனால் அதை வேடிக்கை பார்ப்பதே பொழுது போக்காகக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தன்னையும் கால்பந்து விளையாட்டில் சேர்த்துக் கொள்ளும்படி ஆண் சிறுவர்களிடம் கெஞ்சி இருக்கிறாள். பெண் என்பதால் சேர்த்துக் கொள்ளவில்லை. பிளாஸ்டிக் பைகளுக்குள் துணிகளை அடைத்து அதைக் கால் பந்தாக உருவாக்கி தானே விளையாட ஆரம்பித்தார். பிறகு,அந்த சிறுவர்கள் சேர்த்துக் கொண்டுள் ளனர். மிக விரைவாகவே ஆட்டத்தின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார். கால்பந்து. விளையாடு வதற்காகவே பிறந்தவர் போல் தோன்றினாள்.
கனவாக வந்த உறவு…
மார்தாவின் ஆட்டத்தை பார்த்து வியர்ந்த பலரும் ரியோ டி ஜெனிரோவுக்கு செல்லும் படி ஆலோசனை வழங்கினர் அங்கு தேசிய மகளிர் கால்பந்து அணியில் விளையாட வாய்ப்பு கிடைப்பதற்கு பிரகாசமாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். அதுவரை வெறும் காலோடு விளையாடி வந்த அவரால் புதிதாக ஒரு ஷூ வாங்குவதற்குக் கூட பணம் இல்லை. அங்கு தங்குவதற்கு இடமும் ஒரு வேலை சாப்பாட்டிற்கும் வழி கிடையாது என்பதால் திகைத்து நின்றார். அப்போது அவரது நண்பரின் உதவி தேடி வந்தது. நீ எதைப் பற்றியும் இனி கவலைப்பட வேண்டாம். எதையும் யோசிக்க வேண்டாம் ரியோ டி ஜெனிரோவுக்கு பேருந்து ஏற சொன்னார். குழப்பத்தின் உச்சியில் இருந்ததால் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. பேருந்து புறப்பட தயாரானது. “வாழ்க்கையில் முன்னேற இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது” என்பதால் அடுத்த கணமே ஓடிச்சென்று பேருந்தை பிடித்தார். ரியோ டி ஜெனிரோ வுக்கு சென்ற அந்தப் பேருந்து அவரது எதிர்கால பயணத்தையும் சுமந்து சென்றது.
ரியோ டி ஜெனிரோ நகரின் முக்கிய கால்பந்து மகளிர் அணியான வாஸ்கோடகாமா அணிக்கு 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு செய்து கொண்டிருந்தனர். மார்டாவும் பங்கேற்றார். அதில் தேர்வாகவில்லை என்றால் மீண்டும் ஊருக்கே திரும்பி விட வேண்டும் என்ற பயம் இருந்தாலும் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் கொண்டார். தேர்வாகினர். அவரது நேர்த்தி, வேகம், அசத்தல் இவை அனைத்தும் அணியின் பயிற்சியாளரை வெகுவாக கவர்ந்தது இதனால் தனி கவனம் செலுத்தி பயிற்சிகளைக் கொடுத்தார் இனிமேலும் வெற்றுக் கால்களில் பயிற்சி செய்யக் கூடாது என்று அறிவுரை கூறினார். அப்போதும் ஷூ வாங்க அவரிடம் பணம் இல்லை. இரவல் கேட்க முடியாத சூழல், ரியோ டி ஜெனிரோவுக்கு அழைத்து வந்த அந்த நண்பர் மார்கோஸால் மிக சாதாரண ஷூ மட்டுமே வாங்கிக் கொடுக்க முடிந்தது. அதுவும் சற்று பெரிதாக இருந்தது. ஓடும் பொழுது கழன்று விழுந்து விடும் என்பதால் காகிதங்களை சுருட்டி உள்ளே அழைத்துக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அணியில் உள்ள சக வீராங்கனைகளில் பலரும் கேலி கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதில் சொல்ல தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகக் கவனமாக எதிர் கொண்டார். “வாயால் பேச வேண்டிய அவசியமில்லை மைதானத்தில் தனது ஆட்டத்தின் மூலம் பேச வேண்டும். பிறகு எல்லோரும் தம்மைத் தேடி வந்து பேசுவார்கள்” என்பதை நிரூபித்துக் காட்டினார்.
மாறியது வரலாறு…
உள்ளூரில் தனது திறமையால் கோல் மழை பொழிந்து மற்ற அணிகளை பந்தாடிய அவர், பிரேசில் மகளிர் அணிக்கும் தேர்வாகினார். 2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தில் அறிமுக வீரராக களமிறங்கி உலக அணிகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். முதல் போட்டியில் துவங்கி இறுதிப்போட்டி வரைக்கும் மைதானத்தில் அவர் கால் படாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பம்பரமாய் சுழன்று கோல் அடுத்து முத்திரை பதித்தார். அந்த உலகக் கோப்பையில் மிகச் ‘சிறந்த வீராங்கனை’ பட்டத்தையும் வென்றார். 14 வயதில் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறிய மார்தா தனது 19 ஆவது வயதில் சாதனை மங்கையாக ஊருக்குள் அடி எடுத்து வைத்தார். “பெண்கள் கால்பந்து விளையாடக் கூடாது என்று எந்த ஊர் சொன்னதோ அதே ஊரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஆரவாரம் செய்து வரவேற்றது. ஒட்டுமொத்த உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) அதிக கோல் (17) அடித்தவர் என்ற சரித்திர சாதனைக்கு 33 வயதான மார்டா சொந்தக்காரர் . ஆண்கள் உலக கோப்பை போட்டியில் கூட ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் 16 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்கிறது. மேலும் 5 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த ஒரே வீராங்கனையும் மார்டா தான்.
அதிரடிக்கு பெயர் பெற்ற இவர், கால்பந்து விளையாட்டின் உச்சபட்ச அங்கீகாரமான கோல்டன் ஷூ, கோல்டன் பால் ஆகிய விருதுகளையும் 22 வயதுக்குள் பெற்ற ஒரே வீராங்கனையாகும். மகளிர் உலகக் கோப்பை கால்பந்தில் மட்டுமல்லாமல் பிபா வழங்கும் சிறந்த வீராங்கனை பட்டத்தையும் தொடர்ச்சியாக 6 முறை வென்று சரித்திரம் படைத்திருக்கிறார். இதுவரைக்கும் 150 போட்டிகளில் விளையாடி 112 கோல்கள் அடித்தும் சாதனை நிகழ்த்தியிருக்கிறார். பிரேசில், ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய கிளப் அணிக்காக விளையாடி வரும் இவர் 160 க்கும் அதிகமான கோல்கள் அடித்து எதிரணி வீரர்களை கலங்கடித்துள்ளார். பான் அமெரிக்கா தொடரில் 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் பிரேசில் அணி தங்கம் வென்றபோது தூணாக நின்றார்.
ரோல்மாடல்..
விளையாட்டு உலகில் சாதனை படைக்கும் பலரும் தங்கள் முன்னோடிகளை ரோல்மாடலாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இவரோ சற்று வித்தியாசமானவர். நான்கு குழந்தைகளின் எதிர்க்காலத்தை தனது தோளில் சுமந்துசென்ற அவரது அம்மா, தோட்ட வேலைக்கு செல்வதற்காக அதிகாலையிலே விழித்து கொண்டவர். அந்த தாயின் உழைப்பு, தன்னம்பிக்கை, மன தகிரியமும்தான் விளையாட்டு துறையில் தன்னால் சாதிக்க முடிந்தது அவர் தான் என் ‘ரோல்மாடல்’ என்று பலமுறை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் மார்டா,
தேசிய அணியில் விளையாடிய போது காலில் அணிந்து கொள்ள நல்ல ஷூ கிடையாது. ஆனால், இப்போது சர்வதேச நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்த கால்பந்து விளையாட்டு தான் அவருக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது சாதனையாளராகவும் மாற்றியிருக்கிறது. கால்பந்து விளையாடுவதற்காகவே பிறந்தவர் என்று ரசிகர்களால் போற்றப்படும் மார்டா, பெண்களுக்கு கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அனுபவரீதியாக உணர்ந்து கொண்டு அத்தகைய பணிகளில் வழிகாட்டியாக செயல்பட்டு கொண்டிருப்பதால் 2011 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ணத் தூதுவராகவும் இருந்து வருகிறார். பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீராங்கனை மார்டா, உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தி பிரமிப்பை ஏற்படுத்தினாலும் ஒலிம்பிக் தொடரில் தனது நாட்டிற்கு தங்கம் வென்று கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளது. ஏதன்ஸ், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் இரு முறையும் அமெரிக்கா அணியிடம் வெற்றி வாய்ப்பை பறிக்கொடுத்து வெள்ளிப் பதக்கம் வென்ற பிரேசில் அணிக்கு இந்த முறை தங்கப்பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என்ற அவரது லட்சியம் நிறைவேறட்டும்.