அந்தியூர், மே 25- அந்தியூர் அருகே பர்கூர் கிராமத்தில் தேன் எடுக்க சென்றவர்கள் மீது வனத்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஈரோடு மாவட்டம், பர்கூர் வனப்பகுதியில் கோயில்நத்தம், ஒசூர் பகுதியை சேர்ந்தமாதேவன் (35), நாகராஜ் (25) மற்றும் 3 பேர்தேன் எடுக்க வனத்திற்குள் சென்றனர். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பர்கூர் வனக்காப்பாளர்கள் இவர்களை பார்த்த உடன் அனுமதியின்றி வனத்தில் தேன் எடுக்க வந்தீர்களா என்றுகூறி மாதேவன், நாகராஜ் மற்றும் அவருடன்வந்த மற்ற மூன்று நபர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேன் எடுத்தததாக 3000 ரூபாய் வீதம் ரூ.15000 அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், பர்கூர் வனத்துறையினர்அராஜகமான முறையில் மலைவாழ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்ண்டித்து மலைவாழ் மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தட்டக்கரை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.