tamilnadu

பவானி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமித்திடுக: சிபிஎம் வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 6-பவானி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவரை நியமித்திடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் காலை நேரங்களில் வெளிநோயாளிகள் பிரிவில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது உள்ள மருத்துவர்களால் அனைவரையும் விரைவாகக் கவனிக்க முடியவில்லை. இதனால் நோயாளிகள் மருத்துவரைப் பார்க்க காலதாமதமாகிறது. ஆகவே கூடுதலான மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். காத்திருக்கும் நோயாளிகளுக்கு அமர்வதற்கு இருக்கைகள் கூடுதலாக்க வேண்டும். வெளிநோயாளிகள் பிரிவிலேயே பிரஷர் செக்கப், இரத்த பரிசோதனை, மருந்து மாத்திரை, ஊசிபோடுவது போன்ற பிரிவுகள் உள்ளதால் கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் மட்டுமின்றி மருத்துவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவேஒருசில பிரிவுகளை வேறு பகுதிக்குமாற்ற வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் வார்டு எண் மற்றும் பெயர் பலகைகள் வைக்கப்படவேண்டும். இருதய நோயாளிகளை நீண்ட நேரம் காக்க வைக்காமல் உடனடியாகக் கவனிக்க வேண்டும். கட்டிமுடிக்கப்பட்டு நீண்டகாலமாகத் திறக்கப்படாமல் உள்ளகழிப்பறையினை வெளிநோயாளிகளின் வசதிக்காக உடனடியாக பயன்பாட்டிற்குத் திறந்து விட வேண்டும். மேலும் மருத்துவமனையில் சுகாதாரமான குடிநீர் வசதி செய்துகொடுக்க வேண்டும். மருத்துவமனையை மேம்படுத்துவதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஏ.ஜெகநாதன் தலைமையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், எஸ்.மாணிக்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.