சென்னை:
தமிழகத்தில் மருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜிஸ் குமார், மாநிலச் செயலாளர் எஸ். பாலா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-
சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சியில் கொரோனா தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 100 லேப் டெக்னீசியன் மற்றும் 50 எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஆட் களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது என்றும் எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5000 மக்களுக்கு ஒரு துணை சுகாதார நிலையம், 30000 மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என வலுவான மருத்துவக் கட்டமைப்பு திட்டமிட்டு உருவாக்கப் பட்டது. இத்தகைய சிறப்பான சுகாதார கட்டமைப்பு சமீபகாலமாக சிதைக்கப்பட்டு வருகிறது.
நவீன தாராளமயக் கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கத் துவங்கிய பிறகு அரசு மருத்துவக் கட்டமைப்பை சிதைத்து அதன் மூலம் தனியார் மருத்துவ நிறுவனங்கள் கொள் ளையடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. அரசு மருத்துவமனை என்றால் அங்கே கவனிப்பு இருக்காது, தரமான சிகிச்சை கிடைக்காது என்ற மனநிலை மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.கொரோனா பேரிடர் அரசுமருத்துவமனைகளின் மகத்துவத்தை உணரச்செய்துள்ளது. அரசு மருத்துவமனைகளால் மட்டுமே தரமான, சிறப்பான சேவையை செய்ய முடியும், தனியார் மருத்துவமனைகள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பதை மக்கள் நேரடியாக உணர்ந்துள்ளனர். எனவே தான் பெரும்பகுதி மக்கள் சிகிச்சைக் காக அரசு மருத்துவமனை நோக்கிவருகின்றனர். இந்த மக்கள் அனைவருக்கும் நிறைவான சிகிச்சையை வழங்கவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.எனவே, தேவைக்கு மட்டுமின்றி தேவைக்கும் அதிகமான வகையில் அரசு மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய பணிகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் காலியாக இருக்கக்கூடிய மருத்துவர், செவிலியர், ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் முழுமையாக நிரப்பிட வேண்டும். இப்பணியிடங்களை அரசே நேரடியாக, நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்வதை உறுதிப்படுத்தவேண்டும்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, லேப் டெக்னீசியன் மற்றும் எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்களுக்காக வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை உடனடியாக திரும்பப் பெறுவதுடன் அந்த பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.