உலகளவில் மனிதர்கள் வாழ தகுதியான சிறந்த நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா முதல் இடம்பிடித்துள்ளது.
ஈ.ஐ.யூ எனப்படும் எகனாமிக் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு மனிதர்கள் வாழ தகுதியான 140 நகரங்களின் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்திரத் தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதில் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா வாழ தகுந்த நகரங்களின் பட்டியலில் 100-க்கு 91.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் 98.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், சிட்னி நகரம் 98.1 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதில் ஜப்பானின் ஒசாகா நகரம் 97.7 புள்ளிகளுடனும், கனடாவின் கால்கரி 97.5 புள்ளிகளுடனும், வான்கோவர் நகரம் 97.3 புள்ளிகளுடனும், டொராண்டோ நகரம் 97.2 புள்ளிகளுடனும் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில், தலைநகர் புதுடெல்லி 118-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மோசமான காற்றின் தரம், விரும்பத்தகாத சராசரி வெப்பநிலை, போதிய குடிநீர் இல்லாமை இதற்கு காரணம் இன்று ஈ.ஐ.யூ. குறிப்பிட்டுள்ளது. அதேபோல், மனிதர்கள் வாழ தகுதியான நகரங்களின் பட்டியலில் சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் 30.7 புள்ளிகளுடனும், நைஜீரியா நாட்டின் லகுஸ் 38.5 புள்ளிகளுடனும், வங்க தேசத்தின் தலைநகரான டாகா 39.2 புள்ளிகளுடனும் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளது.