tamilnadu

img

தோழர் அசோக்கின் நினைவுகளை நெஞ்சில் ஏந்தி...

விடுதலைக்காக போராடும் ஒவ்வொரு நொடியிலும் 
உங்கள் திருப்பெயர் 
இசைக்க கேட்கிறேன்...
வாழ்க்கையை மலர்த்தும் ஒவ்வொரு நாளிலும் 
உங்கள் முகங்கள் 
ஒளிரக் காண்கிறேன்.

மரணத்தில் விடுத்த 
விடுதலையின் அழைப்பை 
இருகை நீட்டி 
ஏற்றுக் கொள்கிறேன்.
    - இன்குலாப்

கடந்த வருடம் இதே நாளில் சாதிய ஆதிக்க சக்திகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.மக்கள் நலனே தன்னுடைய லட்சியம் என ஏற்றுக்கொண்டு அந்த இலட்சியப் பாதையில் தன்னையே அர்ப்பணித்து மகத்தான தியாகம் புரிந்திட்ட அசோக்கின் வாழ்வு என்றென்றைக்கும் போற்றி நினைவு கூரப்பட வேண்டியதாகும்.ஆனால் வழக்கமாக செய்யப்படுகின்ற சம்பிரதாயமான நிகழ்வாகாது இது. ஏனெனில் இந்த சமூகத்தை மாற்றியமைப்பது பற்றி அசோக்கிற்கு ஒரு கனவு இருந்தது. அந்த கனவு “சாதியத்திற்கும் மதவாதத்திற்கும் மாற்றான மனிதநேயமே நாங்கள் தோழர் “ எனும் மகத்தான கனவாக இருந்தது.சாதி முறையை உடைத்தெறியும் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றி வந்த அசோக்கை சாதிய சக்திகள் வெட்டி படுகொலை செய்துவிட்டனர்.ஆனால் அவனது இலட்சியங்களை அவர்களால் என்ன செய்ய முடியும்?

மிகச் சிறந்த போராளியாக...
திருநெல்வேலியில் தோழர்.அசோக் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் 2011 ஆம் ஆண்டு  உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு கிளை துணை செயலாளராக, செயலாளராக, தாலுகா குழு உறுப்பினராக, இணைச் செயலாளராக, செயலாளராக, மாவட்டக் குழு உறுப்பினராக செயற்குழு உறுப்பினராக மாவட்ட பொருளாளராக என தொடர்ந்து அந்த லட்சியப் பாதையில் தனக்களிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பணியை நிறைவேற்றியதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளை ஏற்று அமைப்பை திறம்பட வழிநடத்திச் சென்றார்.தன்னுடைய செயல்பாட்டின் காரணமாக குறைந்த வயதில் மிகச்சிறந்த தலைவராக உயர்ந்தார். இது ஆதிக்க சக்திகளுக்கு கடும் அதிர்ச்சியை தந்தது.

பன்முகத்தன்மை...
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மிகச்சிறந்த ஊழியராக செயல்பட்டுவந்த தோழர் அசோக் பன்முகத்தன்மை கொண்ட களப்பணியாளர்.வாலிபர் சங்க கொடியில் உள்ள ஐந்து முனை கொண்ட நட்சத்திரத்தைப் போல தன்னுடைய செயல்பாட்டிலும் நட்சத்திரமாக ஜொலித்தவர். அதிலுள்ள  5 முனைகளைப் போல தன்னுடைய களச் செயல்பாட்டில் போராட்டங்களில் பங்கேற்பது, தோழர்களை திரட்டுவது, அமைப்பாக்குவது, அரசியல்படுத்துவது, அர்ப்பணிப்புடன் செயல்படுவது என ஐந்து முனைகளில் ஒரு சேர செயலாற்றி வந்தார். தோழர் அசோக் அவர்கள் இயக்கத்தின் பொறுப்பிலிருந்த போது மக்களுடைய பிரச்சனைகளை கையிலெடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்.

 அதிலும் குறிப்பாக ஆர். எஸ். நகர் கரையிருப்பு பகுதிகளில் இருந்துவந்த குடிநீர் பிரச்சனையை கையில் எடுத்து வலுவான இயக்கங்களை நடத்தினார். அதன் மூலமாக அப்பகுதியில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டி  கட்டப்பட்டு  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல அரசியல் ரீதியாக முன்னுக்கு வந்த பல்வேறு பிரச்சனைகளையும் கையிலெடுத்து குறிப்பிடத்தக்க போராட்டங்களையும் நடத்திவந்தார். இதில் ஆசிபா படுகொலை, 7 தமிழர் விடுதலை, நீட் எதிர்ப்பு போராட்டம், எங்கே எனது வேலை இயக்கம் என போராட்டங்களை நடத்தியதோடு, தோழர்களை திரட்டுவதிலும் மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டு வந்தார்.இத்தகைய பணிக்கு இடையூறாக இருந்த தன்னுடைய வேலையையும்  கைவிட்டு வேறொரு வேலைக்கு தன்னை மாற்றிக் கொண்டார் என்பது மிக முக்கியமான விஷயமாகும்.

இயக்கமே பிரதானமாக...
தன்னை விட இயக்க நலனே பிரதானம் என்பதினால் தோழர்.அசோக்கின் சிந்தனையும் செயலும் இயக்கத்தின் செயல்பாட்டை மையப்படுத்தியே இருந்து வந்தது. தன்னுடைய போராட்டங்களில் மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து புதிய தொடர்புகளை  உருவாக்கித் தந்தது.இத்தகைய தொடர்புகளை அமைப்பாக்கி, கிளைகளாக மாற்றி, புதிய கிளைகளை உருவாக்கினார்.சமூக மாற்றத்திற்கான லட்சியத்தை ஏற்றுக் கொண்டதுடன், அத்தகைய லட்சியத்திற்கான போராட்டத்தை வலிமையாக்கிட அமைப்பின் பின்னால்  இளைஞர்களை திரட்டினார். இத்துடன் இளைஞர்களை அரசியல்படுத்தக்கூடிய முறையில் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டார். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக சுய கல்வி தொடர்ந்து மேற்கொண்டார். 

வாசிப்பை நேசித்த...
கல்லூரிக்கு போகும் போது  அதிகமாக படிப்பதையும் புத்தகம் வாங்குவதையும் செய்து வந்தார் என்று  அசோக்கின் தாயார் நினைவு கூர்கிறார். இதனை நினைக்கும் போது ‘கல்வியாளருக்கும் கல்வி அவசியம் (the educator himself need education)’ என மாமேதை மார்க்ஸ் சொன்ன மகத்தான வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.தனது லட்சியங்களைப் பற்றிய தெளிவும், அதனை அடைய வேண்டிய பாதை குறித்த சரியான புரிதலும் அதனை மேம்படுத்த எடுத்த முயற்சிகளுமாக  இயக்கத்தில் இருந்த 10 ஆண்டுகளும்  சிரமேற்கொண்டு செயல்பட்டுவந்தார் அசோக். இயக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில்  அசோக்கிற்கு நிகர் அசோக் தான். ஏனெனில் மாநாட்டிற்கு செல்லும்போது கூட உணவு தயாரிப்பதை தன் தாயாரிடம் இருந்து கற்றுக்கொண்டு அதனை செய்யக்கூடிய மனம் படைத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பாளனாக...
வாலிபர் சங்கத்தின் சிவகங்கை மாநில மாநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொண்ட தோழர்.அசோக், தன்னுடைய குழுவின் சார்பில் வந்த கருத்துக்களை முன்வைத்து மாநாட்டு விவாதத்தில் பேசினார். எந்த ஒரு அமைப்பும் தனது கொள்கைகளுக்கு நிறைவேற்ற ஸ்தாபனக் கட்டமைப்பு என்பது அவசியமாகும். வாலிபர் சங்கத்தை மிகச்சரியாக உள்வாங்கியிருந்த தோழராக இருந்ததால்தான் ஆழமான முறையில் கருத்துக்களை முன் வைக்க முடிந்தது.இயக்கத்தை வலிமைப்படுத்த கிளை செயல்பாடும், இளம்பெண்களை திரட்டுவதும் இரண்டு பிரதான பணிகள் என்று எடுத்துரைத்தது மட்டுமல்ல, அதற்கு வாலிபர் சங்கத்தின் ஒவ்வொரு ஊழியரும் பொறுப்பேற்க வேண்டும் என்று அழுத்தமாக முன்வைத்தார். 

இம்மாநாட்டில் கலந்து கொண்ட அசோக், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய அந்த புகைப்படம் தான் இன்றைக்கும் அசோக்கின் நினைவைப் போற்றுகின்ற படமாக தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.தன்னுடைய தாயும் சித்தியும் அக்காவும் தம்பிகளும் என குடும்பத்தையே  ஆகர்சிக்கக்கூடியவராக இருந்து வந்துள்ளார்.தோழர். அசோக்கின் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இவர்கள் அனைவரையும் இயக்கத்தின் மீதான பற்றாளர்களாக மாற்றியுள்ளது. அசோக் பழகிய பல்வேறு தோழர்களும் அவரது பல்வேறு சிறப்பியல்புகளை தொடர்ந்து இன்றைக்கும் பேசிய வண்ணம் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் வெட்டிக் கொல்லப்பட்ட அசோக்கின்  குருதி காய்ந்து போய் இருக்கலாம்.  ஆனால் அவருடைய நினைவுகள் இந்தியா முழுவதும் உள்ள வாலிபர் சங்க தோழர்கள் மனதில்  ஈரத்துடன் இருக்கிறது.தோழர் அசோக் உயர்த்திப் பிடித்த வாலிபர் சங்க வெண்கொடியின் மக்கள் நலனுக்கான போராட்டத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேரிடர் காலத்தில் கூட நாட்டின் வளங்களை விற்கின்ற நிலைமையும் மக்கள் நலனில் ஆளும் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற அலட்சியமும் மக்களை மேலும் மேலும் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது. தோழர் அசோக்  செயல்பட்டு வந்த மகத்தான இலட்சியத்திற்கான போராட்டத்தின் தேவை அதிகரித்துள்ளது. தோழர் அசோக்கிற்கு  செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது இப்போராட்டங்களில் கலந்து கொள்வதும், போராட்டதை வலுப்படுத்த இளைஞர்களை அணி திரட்டுவதற்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்வதிலும்தான் அடங்கி இருக்கிறது.

எஸ்.பாலா, மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்