tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் கந்துவட்டிக்கு கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் பெண்கள்... கே.பாலபாரதியிடம் முறையீடு

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்நடத்தியது. கொரோனா ஊராடங்கால் வேலைவாய்ப்பின்றி பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான கே.பாலபாரதியிடம் பெண்கள் முறையிட்டனர். 

ரெட்டியார்சத்திரம் மணியகாரன் பட்டி, 7, 8, 9, வார்டு பகுதிகளில் வசிக்கும்மக்களிடம் கே.பாலபாரதி குறைகளைக்கேட்டறிந்தார். அப்போது அவர்கள், “கொரோனா ஊரடங்கு காரணமாக எங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பல்வேறு சிரமங் களை சந்தித்து வருகிறோம். கடந்த ஐந்து மாதங்களாக கந்துவட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்துகிறோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி குளத்து வேலைவழங்கினால் எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றனர். 

ரெட்டியார்சத்திரம் அருந்ததிய மக்கள் கூறுகையில், “நாங்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். நலவாரிய அட்டைஉள்ளது. ஆனால், அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் கிடைக்கவில்லை. அஞ்சலகத்தில் ரூ.100 கட்டினால் நிவாரணம் கிடைக்கும் என்றார்கள். நாங்கள் பணம் கட்டியும் நிவாரணத்தொகை கிடைக்கவில்லை” என்றனர்.தருமத்துப்பட்டி இந்திரா நகர்குடியிருப்பு பகுதி மக்கள் கூறுகையில்,“பல மாதங்களாக குடிநீர் வரவில்லை. குடிநீரை விலைக்கு வாங்கிக் குடித்து வருகிறோம். ரேஷன்கடைகளில் கோதுமைகிடைக்கவில்லை. என்றனர். இதையடுத்து வட்ட வழங்கல் அதிகாரியை கே.பாலபாரதி அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதையடுத்து ரேசன் கடைக்கு கோதுமை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்தார். மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஒன்றியச்செயலாளர் கே.எஸ்.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஏ.கருப்பணன், சந்துரு, நந்தகுமார், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து செவ்வாயன்று புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிறுநாயக் கன்பட்டி, குளத்துப்பட்டி, முத்துராம்பட்டி கிராமங்களில் நூறு நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர் களை சந்தித்துப்பேசினர்.