தருமபுரி, ஏப்.1- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு சித்தேரி மலை பழங்குடி மக்களிடம் தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தினர் வாக்கு சேகரித்தனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் மருத்துவர் எஸ். செந்தில்குமார், அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தருமபுரி மாவட்டம், சித்தேரி பழங்குடி மக்களிடம் தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில், தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் பழனிசாமி, சித்தேரி மலை செயலாளர் நாகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், அரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.மல்லிகா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஈ.கே.முருகன், வி.ஆறுமுகம், சி.பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, சித்தேரி மலை கிராமங்களான சித்தேரி- மண்ணூர், கல்நாடு- எருமை கடை, சித்தேரி- நலமாங்கடை, மாம்பாறை- மிதிக்காடு, வாச்சாத்திகலசபாடி- கலசபாடி- கருக்கம்பட்டி, சூரியக்கடை-தேக்கல்பட்டி, பேரேரி- வெளாம்பள்ளிகிராமங்களுக்கு சென்றனர். அப்போது இணைப்புச்சாலைகள், மனைப்பட்டா, நிலைப்பட்டா, குடிநீர், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.