tamilnadu

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தருமபுரி, மே 14-குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தருமபுரி அருகே உள்ள பெரிய குரும்பட்டி கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கிராம மக்களின் தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக மேற்கண்ட கிராமத்திலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.இந்த கிராமமக்கள் சில கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீரை எடுத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி கிராமப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இருந்தபோதிலும் அந்த கிராம பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்தது.இந்நிலையில் குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திங்களன்று காலிக்குடங்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி அந்த அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது கிராமமக்கள் கூறுகையில், ஒகேனக்கல் குடிநீருக்காக 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பனந்தோப்பு கிராமத்திற்கு செல்கிறோம். அங்கு குழாயில் வெளியேறும் தண்ணீரை பிடித்து எடுத்து வந்து வடிகட்டி குடித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீரை வழங்கவும், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.ஒகேனக்கல் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அலுவலர்கள் மற்றும்காவல்துறையினர் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகை போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.