சென்னை, ஏப். 11 - இலவச வீட்டு மனை பட்டா வழங்க, நில வகை மாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் நீர் பிடிப்பு பகுதியாகவும், தண்ணீர் இல்லாத நாட்களில் களத்து மேடாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. களம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை, இலவச வீட்டு மனை பட்டா திட்டத்திற்காக நத்தம் என வகை மாற்றக் கூடாது என பஞ்சாயத்து தலைவருக்கு உத்தரவிடவும், இருளர் இன மக்களுக்கு வேறு இடத்தை கண்டறியவும் அரசுக்கு உத்தரவிட கோரி கார்த்திக் நாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம். துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு விசாரித்தது. 4 வாரங்க ளில் மாவட்ட ஆட்சியர், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி, மிட்டா மாண்டகப்பட்டு பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.