தருமபுரி, மே 15-பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் வணிகர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை நடைபெற்றது.தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி நகரில் அண்மையில் திருட்டு சம்பவங்கள், தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் சுமார் ரூ.46 லட்சம் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. பொம்மிடியில் அடிக்கடி நடைபெறும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு பொதுமக்களிடம் வழங்கியுள்ளனர்.இந்நிலையில், செவ்வாயன்று வணிகர்கள், நகை அடகு கடை உரிமையாளர்கள், பல்பொருள் அங்காடி உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.வணிகர்கள் அனைவரும் சி.சி.டி.வி கேமரா பொருத்தவேண்டும். வணிக நிறுவனங்களுக்கு தனியார் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதில் காவல் ஆய்வாளர் சரவண குமரன், காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.