தருமபுரி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட மூத்த தலைவர் பென்னாகரம் தோழர் எம்.ஆறுமுகம் வெள்ளியன்று காலமானார்.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மடம் கிரமாத்தைச் சேர்ந்தவர் தோழர் எம்.ஆறுமுகம் (65). தருமபுரி அரசு கல்லூரியில் படித்தபோது கல்லூரியின் மாணவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு 1978 ஆம் ஆண்டு தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, மூத்ததலைவர் வி.மாதன் அவர்களுடன் இணைந்து பென்னாகரம் பகுதியில் குத்தகை விவசாயிக்கான போராட்டத்தையும், கந்துவட்டிக் கொடுமையை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். 1993ஆம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக ஆத்திரமடைந்த காவல்துறை அவரது மர அறுப்பு மில்லையும், வீட்டையும் அடித்து நொறுக்கிசூறையாடினர். காவல்துறை யின் இத்தகைய அடக்குமுறை க்கும் அஞ்சாமல் தொழிலாளர் களுக்காக தொடர்ந்து போராடி யதுடன், அப்பகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறினார்.
1991 மற்றும் 1996 ஆம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். இதில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெறும் 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவர். இருப்பினும் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை கூத்தப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராக செயல்பட்டார். இதேபோல், 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம்ஆண்டு வரை பென்னாகரம் பகுதி மாவட்ட கவுன்சிலராக மக்கள் செல்வாக்குடன் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். மேலும் மாவட்ட பால்வள கூட்டுறவு சங்கத்தின் இயக்குனராகவும், மடம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக இருந்து வந்தார்.இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் தருமபுரி மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி வந்தார். குறிப்பாக, தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம், விவசாயநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் திட்டம் போன்ற விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து போராடியதால் பொய் வழக்குகளை சந்தித்தவர். வெகுஜன பாமர மக்களின் நலனுக்காக அயராது உழைத்து அவர்களின் அன்பைப் பெற்றவர் தோழர் எம்.ஆறுமுகம். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தோழர் எம்.ஆறுமுகம் வெள்ளியன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். தோழர் ஆறுமுகம் அவர்களுக்கு ஜோதி என்ற மனைவியும், ஆ.ஜீவானந்தம், ஏ.பூபேஷ் குப்தா என்ற இரு மகன்களும், கனிமொழி என்ற மகளும் உள்ளார். ஆ.ஜீவானந்தம் தீக்கதிர் நாளிதழின் பென்னாகரம் வட்ட செய்தியாளராக செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.