தருமபுரி, ஏப்.13-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைத்து கிராம மக்களுக்கும் வேலைகிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் சனியன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட அம்பாளப்பட்டி, குருபரஹள்ளி, தாளநத்தம், டி.அய்யம்பட்டி, கர்த்தானூர், தென்கரைக்கோட்டை, வடகரை, பெத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, அவர் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்குகள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இந்த மரவள்ளிக் கிழங்குகளுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், கிராமப் பகுதிகளில் குடிநீர், சாலை வசதிகள், தெரு விளக்குகள், பேருந்து வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்டத்தில் அனைத்துகிராம மக்களுக்கும் வேலைகிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும. மேலும், தருமபுரி மாவட்டத்தில் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் புதிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார். இப்பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இதேபோல், திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடுவீடாக தீவிர வாக்குச்சேகரிப்பு நடைபெற்றது. இப்பிரச்சாரம், நல்லம்பள்ளி ஒன்றியம், ஒட்டப்பட்டி சத்யாநகர், பெருமாள்கோயில்மேடு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி, மாவட்டகுழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,எஸ்.எஸ்.சின்னராஜ்,முனியப்பன், மங்கை இந்திராணி, அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரூர் சட்டமன்ற தொகுதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து அரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட மொரப்பூர், எலவடை, நவலை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், ஒன்றிய செயலாளர்கள் மொரப்பூர் கே.தங்கராஜ், அரூர் ஆர்.மல்லிகா, மாவட்டகுழு உறுப்பினர் பி.வி.மாது,மற்றும் கே.என்.நேரு. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.