india

img

வரும்கால தடுப்பூசி செலுத்துதலில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்.... முதலாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி....

புதுதில்லி:
வரும் காலத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் தனியார் நிறுவன முதலாளிகள் உடனான சந்திப்பில், இதனை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உலகிலேயே இந்தியாவில்தான் குறைவான விலைக்கு தடுப்பூசிகள் கிடைப்பதாக பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

‘இந்தியாவில் ‘மிஷன் கோவிட் சூரக்ஷா’ திட்டத்தின் கீழ் பொது - தனியார் கூட்டு முயற்சியில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள்தான் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது.தடுப்பூசிக்கான மிகச் சிறந்த மேம்பாட்டுச் சூழல் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மருந்து நிறுவனங்கள் தேவையான அனைத்து உதவிகளைப் பெறுவதை மட்டுமல்லாமல், அவர்களின் தடுப்பூசிக்கு விரைவாக- அதேநேரம் அறிவியல் பூர்வமாக ஒப்புதல் கிடைப்பதை- மத்திய அரசு உறுதி செய்தது. தற்போது சோதனையில் உள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கும் விரைவாக ஒப்புதலை வழங்கும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய தனியார் துறையின் சுகாதார உள்கட்டமைப்பு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் துறை பங்கு மேலும் முக்கியமானதாக மாறும். இதற்காக, மருத்துவமனைகள் மற்றும் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு தேவைப்படும்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.பதிலுக்கு, அதிக அளவிலான மக்களுக்குத் தடுப்பூசியை வழங்கும் விதமாக 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியிருப்பதற்கு மோடி அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக மருந்து நிறுவன முதலாளிகள் கூறியுள்ளனர்.

பொதுத்துறை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை ஒதுக்கி வைத்து விட்டு, முழுக்க முழுக்க தனியாரையே மோடி தூக்கிச் சுமக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர். இலவச தடுப்பூசி என்பதை ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டு, அதனை தனியார் முதலாளிகளுக்கும் - கொரோனா தொற்றாளர்களுக்கும் இடையிலான வர்த்தகமாக மாற்றிவிட மோடி அரசு முயற்சிக்கிறது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், அந்தக் குற்றச்சாட்டை உண்மையாக்குவது போலவே, பிரதமர் மோடி, தனியார் மருந்து நிறுவன கூட்டப் பேச்சு அமைந்துள்ளது.