திருவனந்தபுரம், மே 2- கேரளாவில் இருந்து பல்வேறு வட இந்திய நகரங்களுக்கு சனியன்று புறப்பட்ட 5 நேரடி சிறப்பு ரயில்களில் சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே வெள்ளியன்று மாலை ஆலுவாவிலிருந்து புவனேஸ்வரத்துக்கு நேரடி சிறப்பு ரயில் 1200 தொழிலாளர்களுடன் புறப்பட்டது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாட்டிலேயே முதலாவதாக இயக்கப்பட்ட பயணிகள் ரயில் இதுவாகும்.
சனியன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம் வடக்கு, ஆலுவாய், திரூர், கோழிக்கோடு ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து 5 சிறப்பு நேரடி ரயில்கள் இயக்கப்பட்டன. திருவனந்தபுரத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலம் பாத்தி ரயில் நிலையத்திற்கு மதியம் 2 மணிக்கு புறப்பட்டது. இதுபோல் ஜார்கண்டுக்கு மற்றொரு ரயில் கோழிக்கோட்டிலிருந்து புறப்பட்டது. ஆலுவாவிலிருந்தும், திரூரிலிருந்தும் தலா ஒரு ரயில் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்டன. எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்துக்கு ஒரு ரயில் புறப்பட்டது. இவை அனைத்தும் இடைநில்லா ரயில்கள் ஆகும்.
பயண ஏற்பாடுகள்
கேரளாவில் வெளிமாநில தொழிலா ளர்களின் பயண ஏற்பாடுகளுக்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு குழு பயணத்துக்கான ரயிலின் முன்பதிவு ஏற்பாடுகளையும், மற்றொரு குழு மருத்து வ பரிசோதனை ஏற்பாடுகளையும். மூன்றாவது குழு முகாம்களிலிருந்து புறப்படுவோருக்கான உணவு உள்ளிட்ட வசதிகளையும் கவனித்துக்கொண்டன. வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் முகாம்களிலிருந்து ஒவ்வொரு பேருந்திலும் தலா 20 பேர் வீதம் தனிமனித இடைவெளியில் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவுப் பொட்டலம், மருத்துவ பரிசோதனை அறிக்கை, ரயில் முன்பதிவு சீட்டு போன்றவற்றை ஒப்படைத்து ரயில்களில் ஏற்றிவிடப்பட்டனர். மூட்டை முடிச்சுகளுடனும் குழந்தைகளுடனும் பலர் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.