tamilnadu

img

ரூ. 50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் பதவி!

பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இந்த பஞ்சாயத்தில் 1,900 ஓட்டுகள் உள்ளன. மொத்தம் 8 வார்டுகள் உள்ள இந்த கிராம பஞ்சாயத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவித்த உடனேயே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் என்பவர், தனக்கு தான் தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் மீறி யாராவது போட்டியிட்டால், அவர்களை தாக்குவேன் என அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம், நடுக்குப்பம் பகுதியில் உள்ள கோவிலில் இன்று நடைபெற்றது.
அந்த ஏலத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தருவதாக அதிமுகவை சக்திவேல், மற்றும் தேமுதிகவை சேர்ந்த முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட ஊர்மக்கள், ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராக இருந்த சக்திவேல் இந்த முறையும் பஞ்சாயத்து தலைவராக தொடர தீர்மானம் செய்துள்ளனர். இதையடுத்து, ஏலத்தொகையை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த இருவருக்கும் அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இச்சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக விசாரணை நடத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.