இந்திய அணியின் தோல்விக்கான காரணம்
ஞாயிறன்று நிறைவு பெற்ற மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரின் 7-ஆவது சீசன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்து 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் லீக் ஆட்டத்திலிருந்து தோல்வியைப் பற்றி அறியாமல் வெற்றி என்ற கம்பீர நடையுடன் இறுதிவரை (அரையிறுதியில் முடிவு இல்லை) அசத்தலாகப் பயணித்த இந்திய அணி எப்படி கோப்பையை நழுவவிட்டது. தற்போது சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி ஏற்கெனவே முதல் லீக் ஆட்டத்தில் வீழ்த்திய அனுபவம் இருந்தும் எப்படி இறுதிப் போட்டியில் மண்ணை கவ்வியது என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.
- மழை பிரச்சனையைக் காரணம் காட்டி அதிக பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தது.
- ஆடுகளத்தின் தன்மையை உணராமல் பந்துவீசியது.
- தொடர் வெற்றியால் மனச்செருக்குடன் களமிறங்கியது.
- இந்திய அணியின் இளம் தொடக்க வீராங்கனை ஷபாலியை மட்டும் பேட்டிங்கில் நம்பியது.
- 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை முதல் லீக் ஆட்டத்தில் வீழ்த்தியதால் நாங்கள் தான் ராணி என்ற நினைவுடன் அதிரடியாக விளையாடாமல், கவனக்குறைவாக விளையாடியது.
- அரையிறுதியில் விளையாடாதது. அரையிறுதியில் பலமான இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருந்தால் அதே அதிரடி மனநிலையுடன் ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கலாம்.
- கோப்பை கனவுடன் அதிரடியாக, ஆக்ரோஷமாக விளையாடாமல், பயிற்சி ஆட்டம்போல் விளையாடியது.
- இளம் வீராங்கனைகள் அதிகம் இருந்தும் அவர்களை மதிக்காமல் சீனியர் வீராங்கனைகளை ஒதுக்கும் செயலில் ஈடுபட்டது.
- கடைசியாக மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களை அதிகம் நோட்டம்விட்டது.
மேற்குறிப்பிட்ட செயல்கள் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையைப் பறிகொடுத்தது. விளையாட்டு உலகில் எந்தவிதமான போட்டிகளாக இருந்தாலும் அதிரடி மனநிலையைக் கொஞ்சம் பயன்படுத்துவது நல்லது தான். கிரிக்கெட் விளையாட்டில் அதிரடி மனநிலை கண்டிப்பாகத் தேவை. ஆனால் இந்திய மகளிர் அணி அந்த மனநிலையை என்னவென்று அறியாமல் விளையாடியது தான் மிகவும் பரிதாபமாக உள்ளது. எனினும் தொடக்க வீராங்கனை ஷபாலி தனது ரத்த துடிப்புக்கு ஏற்ப நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் அனைத்து அணி பந்துவீச்சாளர்களையும் புரட்டியெடுத்தது மிகவும் சிறப்பான செயலாகும்.