இந்தியாவில் டி-20 போட்டிகளின் தாக்கத்தினால் டெஸ்ட் போட்டிக்கான சுவாரஸ்யம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 20,000 பேருக்கும் அதிகமாக அமரக்கூடிய இந்திய மைதானங்களில் தற்போதைய சூழ்நிலையில் டெஸ்ட் போட்டியை நடத்தினால் வெறும் 300 அல்லது 400 பேர் மட்டுமே போட்டியை ரசிக்கின்றனர். இதனால் டெஸ்ட் போட்டி இந்தியாவில் அழியும் நிலையில் உள்ளது. இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியைக் காப்பாற்ற புதிய பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி தனது தொடக்க நடவடிக்கையாகப் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என அறிவித்தார். இதுநாள் வரை இந்திய அணி வீரர்கள் பகலிரவு டெஸ்ட் போட்டிக்குப் பயன்படுத்தப்படும் பிங்க் (இளஞ்சிவப்பு) நிற பந்தை காரணம் காட்டி கடந்த 3 வருடங்களாகப் போக்கு காட்டி வந்த நிலையில். கங்குலி எடுத்த அதிரடி முடிவால் வங்கதேசத்திற்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் காலடி வைக்க உள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி கங்குலியின் சொந்த ஊரும், மேற்கு வங்க தலைநகருமான கொல்கத்தாவில் உள்ள பாரம்பரியமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளியன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகளால் கொல்கத்தா நகரமே பிங்க் (இளஞ்சிவப்பு) வண்ணத்தில் காட்சி அளிக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 750 மீ நீளத்தில் உள்ள ஹவுரா பாலத்திற்கு பிங்க் வண்ண லெட் பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. எஸ்ஜி (SG) வகையைச் சேர்ந்த பிங்க் பந்துகள் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் பயன்படுத்த உள்ளன. இந்த போட்டிக்கு 72 பந்துகளை வழங்க எஸ்ஜிக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
இந்தியா - வங்கதேசம்
இடம் : கொல்கத்தா
தொடக்க நேரம் : மதியம் 12 மணி
நிறைவுபெறும் நேரம் : இரவு 8:30-க்குள்