இலங்கை வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியோடு ஓய்வு பெற இருப்பதாக இலங்கை அணியின் கேப்டன் கருணா ரத்னே தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, இலங்கை அணிக்கு ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்காளதேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டது.
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, இலங்கையில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியோடு மலிங்கா ஓய்வு பெற இருப்பதாக கேப்டன் கருணா ரத்னே தெரிவித்துள்ளார்.
மலிங்கா இதுவரை இலங்கை அணிக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலக கோப்பை தொடர்களில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும் இலங்கை அணியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.