tamilnadu

img

குடியுரிமை சட்ட திருத்தம் கங்குலி மகள் எதிர்ப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய பல்கலைக்கழகமான ஜாமியா மிலியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண நெட்டிசன்கள் வரை மத்தியில் ஆளும் பாஜக அரசை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்து வரும் நிலையில், கிரிக்கெட் உலகின் தாதாவும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் ‘தி எண்ட் ஆப் இந்தியா’ என்ற புத்தகத்தில் குறிப்பபிடப்பட்டுள்ள சில  வரிகள் அடங்கிய பக்கத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து அதற்கு கீழ் “முட்டாள்களின் சொர்க்கத்தில் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இல்லாததன் காரணமாக நாமெல்லாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்” என்ற கருத்தை கூடுதலாக இணைத்து குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக  போர்க்கொடி தூக்கியுள்ளார்.  சனா கங்குலியின் இந்த பதிவு இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் முகநூல் என மூன்றிலும் டாப் ஆர்டரில்  டிரெண்டாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.  ஏற்கெனவே மாணவர்களின் எழுச்சியால் மேற்கு வங்க மாநிலமே போராட்டக்களமாக மாறியுள்ள நிலையில், சனா கங்குலியின் பதிவு அடுத்த கட்ட ஆயத்த பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கங்குலியால் சர்ச்சை 

தனது மகளின் கருத்து நாடு முழுவதும் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில்,”இந்த விவகாரத்திலிருந்து சனாவை விட்டுவிடுங்கள். இந்த பதிவு உண்மை இல்லை. அவள் இளம் பெண். அரசியல் பற்றி சனாவுக்கு எதுவும் தெரியாது” என்று கூறியுள்ளார். கங்குலி விளக்கம் அளித்துள்ள அடுத்த சில நிமிடங்களில் சனா கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து பதிவை நீக்கியுள்ளார்.