கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள் அமலாக்கம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால், இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் தங்களது மாற்றுக் கொள்கைகளை பிரச்சாரம் செய்யவும் நேரடியாக மக்களை சந்திக்க முடியாத ஒரு சூழல் எழுந்தது.
இந்த நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக மாற்றுக் கொள்கைகள் சார்ந்த பிரச்சாரத்தை சற்று இடைவெளி இல்லாமல் முன்னெடுத்து செல்லும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ளது. கட்சியின் பல்வேறுமாவட்டக் குழுக்கள் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் மாநில, மாவட்டக் குழுக்கள் சமூக ஊடக தளங்கள்வாயிலாக ஏராளமான பிரச்சார நிகழ்வுகளை, சொற்பொழிவுகளை, கருத்தரங்குகளை நடத்திய வண்ணம் உள்ளன.இவற்றின் வாயிலாக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்களை, தோழர்களை, ஆதரவாளர்களை இப்பிரச்சாரம் சென்றடைகிறது. ஸ்மார்ட்போன் இல்லாத, இணையவசதி இல்லாத மக்கள் மத்தியில் இப்பிரச்சாரம் சென்றடைய இயலவில்லை என்ற நிலை உள்ள போதிலும், இதுவரை இடதுசாரிகளின் கருத்துக்களை அறியாதவர்களின் கவனத்திற்கு கூட இப்பிரச்சாரம் சென்றடையும் புதிய வாய்ப்பும் இதன்மூலம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
புதிய சூழல், புதிய புதிய உத்திகளை, பிரச்சார வடிவங்களை நோக்கி மக்கள் இயக்கங்களை கொண்டு செல்கின்றன. இது ஒரு புதிய அனுபவமாகவும் மாறியுள்ளது. அந்தவகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழுவின் சார்பில் ‘சிபிஐ(எம்) நார்த் சென்னை’ என்ற பெயரில் முகநூல் துவங்கப்பட்டு முகநூல் பக்கத்தில்அரசியல் விமர்சனங்கள், சமூக பிரச்சனைகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் நேரடி அரசியல்செயல்பாட்டில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவான காரணத்தால் முன்னுக்கு வரும் அரசியல் நிகழ்வுகள், சமூக பிரச்சனைகள் குறித்து முகநூல் நேரலை நிகழ்ச்சியை மேற்கொள்ளலாம் என்று, மார்ச் 27ம் தேதி முதல் தொடர்ந்து நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு ஜுலை 12 அன்றுநூறாவது நாளை எட்டி, தொடர்ந்து 115வது நாளை எட்டியுள்ளது.
நூறாவது நாள் நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி நேரலை நிகழ்ச்சியைப் பாராட்டியும், இன்றைய அரசியல் நிலைமைகள் குறித்தும்,சமூக வலைதளக் குழுவைப் பலப்படுத்துவதன் அவசியத்தையும் விளக்கிப் பேசினார்.வடசென்னை மாவட்ட முகநூல் நேரலை நிகழ்ச்சியில்மார்க்சிஸ்ட் கட்சியினுடைய தலைவர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், துறைசார்ந்த வல்லுநர்கள், அறிஞர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டனர். இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழுஉறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், க.கனகராஜ், பெ.சண்முகம், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோருடன், பொருளாதார அறிஞர் பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பேரா.சீனிவாசன், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், பிரபல திரைக் கலைஞர் நடிகை ரோஹிணி, இயக்குநர் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், பட்டிமன்ற பேச்சாளர் நா.முத்து நிலவன், முன்னாள் தமுஎகச தலைவர் வழக்கறிஞர் சிகரம் செந்தில் நாதன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், தமிழ்க் கடல் நெல்லை கண்ணன், உளவியல் அணுகுமுறை குறித்து பிரபல மருத்துவர் ஜெயராணி காமராஜ், கொரோனா தொற்று குறித்து மருத்துவர்கள் ஏ.ஆர்.சாந்தி, பாக்கியராஜ் மற்றும்காசி, திரைப்பட இயக்குநர்கள் கோபி நயினார், லெனின் பாரதி,கீரா, கதையாசிரியர் பாக்கியம் சங்கர், தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, பிரபல திரைப்பட பாடலாசிரியர் ஏகாதசி, கல்வியாளர் ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்கள் ஆண்டாள் பிரியதர்சினி, சு.பொ.அகத்தியலிங்கம், கரன் கார்க்கி, திருநங்கை பிரியா பாபு, ஊடகவியலாளர் ஜென்ராம், ராஜசங்கீதன், ஹாசீப் முகமது, கல்வியாளர் தாவூத்மியான்கான், சமூக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன், கதை சொல்லி பிரியசகி, பவா செல்லத்துரை, பத்திரிக்கையாளர்கள் அ.குமரேசன், ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ஆதி.வள்ளியப்பன், அரவிந்த் குமார், நக்கீரன் பிரகாஷ், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சார்ந்த செந்தில் ஆறுமுகம், பேராசிரியர்கள் காளீஷ்வரன், சுந்தரவள்ளி, ஆய்வாளர் கல்பனா கருணாகரன், எழுத்தாளர் தொழிற்சங்கத் தலைவர் ஜா.மாதவராஜ், வழக்கறிஞர்கள் அருண்மொழி, ஜீவலட்சுமி, இயக்குநர் மதுரை பாலன், நியூயார்க்கிலிருந்து ஜார்ஜ் பிளாய்டு மரணம் மற்றும் நிறவெறி குறித்து ஜீவிதாமற்றும் கலாநிதி ந.ரவீந்திரன், ரூஸ்டர் நியூஸ் நிர்வாக இயக்குநர் ராகுல், மு.ஆனந்தன், பார்த்தீபராஜா, நிவேதிதா லூயிஸ், அகத்தியன், மூரா, சாந்தி செல்வராஜ், உமா மகேஷ்வரி, முபீன் சாதிகா, பிரளயன், ம.ஆ.சினேகா, கிருஷ்ணவேணி, வ.கீதா, டி.கே.சண்முகம், சி.பி.கிருஷ்ணன்,சரவணதமிழன் உள்பட எண்ணற்றோர் கருத்துரை வழங்கினார்கள்.
அம்பத்தூர் பாரதி கலைக்குழுவின் நையாண்டி தர்பார், தோழர் சுந்தரய்யா நினைவு நாளன்று ஆந்திர மாநில திருப்பதி கலைக்குழு நிகழ்ச்சி, புதுச்சேரி சப்தர்ஹஷ்மி கலைக்குழு, தடம்பதி கலைக்குழு உள்ளிட்டவையும் நடைபெற்றன. வாரம் ஒரு நாள் சிறப்பு விவாத அரங்கம் என்ற முறையில் “அதிர்ச்சியில் சென்னை மக்கள் அரசு நம்மை காக்குமா”என்ற தலைப்பில் டி.கே.சண்முகம் ஒருங்கிணைக்க ஜி.ராமகிருஷ்ணன், நிவேதிதா லூயிஸ், கிஷோர்குமார் பங்கேற்றனர். மதுரை பாலன் அவர்களை நடுவராக கொண்டு கவிஞர் மூரா, முனைவர் சாந்தி ஜெயராஜ், கவிஞர் உமா மகேஷ்வரி, பத்திரிக்கையாளர் அ.குமரேசன் பங்கேற்ற பட்டிமன்றம், “புதிய கோணம் புதிய பார்வை” என்ற தலைப்பில்டி.கே.ரங்கராஜன், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இந்த நிகழ்வுகள் வடசென்னை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சமூக ஊடக ஆர்வலர்களை ஈர்த்துள்ளது. எண்ணற்ற குடும்பங்களுக்கு கட்சியின் பிரச்சாரத்தை கொண்டு சென்றுள்ளது. இத்தகைய பிரச்சார வடிவம்நிச்சயம் எதிர்கால புதிய வடிவங்களுக்கு அடிப்படையாக அமையும்.
===எல்.சுந்தரராஜன்===
வட சென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)