சென்னையில் கொரோனா நோய்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அடர்த்தியாக வாழும் சென்னை ஆரம்பத்தில் கோட்டைவிட்ட தமிழக அரசு இப்போது இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. மக்கள் பீதியிலும் பயத்திலும் இருக்கிறார்கள். இந்நிலையில் இதுதான் சமயம் என்று எண்ணி பணத்தைச் சுருட்ட அதிகாரிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
கொரோனா தொற்று கண்டறியப்பட்டவரை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்ததெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது சென்னையில் கொரோனா நோயாளிகளை மருத்துமனைக்கு அழைத்துச்சென்று உரிய சிகிச்சை அளிப்பதில்லை. ஒருவருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டால் நீங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்; மூச்சுதிணறல் ஏற்பட்டால் எங்களுக்கு தகவல் கொடுங்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. தனிமைப்படுத்தி வைத்திருப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு உள்ளிட்ட பொருட்கள் வாங்கித் தருவதாக போலி பில் தயாரித்து பணம்பெற்றுக்கொள்கிறார்கள். இது இப்போது சென்னையில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா நோயாளிகள் அதிகம்பேர் இருக்கிறார்கள். தொற்று உள்ளவர்கள் 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள்.
தனிமைப்படுத்திப்படுத்தி வைத்திருப்பவர்கள் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறார்கள். தொற்று அறிகுறியில்லாமல் இருப்பவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு மாநகராட்சி சார்பில் காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்குவதாக போலி பில் தயாரித்து பணம்பெற்று விடுகின்றனர் என்று பெருமளவில் புகார்கள் வந்துகொண்டுள்ளது. இதேபோல் சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் கட்டுக்கட்டாக போலி பில்களை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதற்கு சென்னை மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்று பேசப்படுகிறது. பேரிடர் காலகட்டம் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் அளிக்கும் எல்லா பில்களுக்கும் உயரதிகாரிகள் அனுமதி அளிக்கிறார்கள். மக்கள் பணம் பல வகைகளில் கொள்ளை போகிறது. அதில் இதுவும் ஒரு வகை.
====ஆரூரான்====