திருப்பூர், ஏப்.2-
காங்கேயம் பகுதியில் சீரான குடிநீர், சாக்கடை கால்வாய் வசதிகள் செய்து தரப்படும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி கூறினார்.ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் அருகே உள்ள பாப்பிலி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, காங்கேயம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கான திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதை தடுக்க தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன். காங்கேயம் பகுதியில் குடிநீர் பிரச்சனை, சாக்கடை பிரச்சனை இருந்து வருவதாகவும், இதைதீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கோமாரி நோயினால் இறந்துபோன கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்காமல் உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உரிய இழப்பீடு பெற்று தரப்படும். மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை விரட்ட நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சார நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், வடக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம், நகர செயலாளர் மணிவண்ணன், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கேயம் தாலுகா செயலாளர் ஆர்.திருவேங்கடசாமி, கொமதேக திருப்பூர் மாவட்ட செயலாளர் கங்கா சக்திவேல், மதிமுக நகர செயலாளர் வெங்டேஷ், ஒன்றிய செயலாளர் மணி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.