மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கோவையில் 400 பவுண்டரி தொழிற்கூடங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை புதனன்று துவக்கியது.
கோவை மாவட்டத்தில் சுமார் 400 குறு மற்றும் சிறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பவுண்டரி தொழில் சார்ந்த மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் பவுண்டரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தக்கோரி தொடர்ந்து மத்திய அரசிடம் தொழில்துறையினர் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே திட்டமிட்டே செயற்கையாக மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளதாக தொழில்துறையினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாவட்ட குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தினர் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறிவிப்பு செய்தனர். இதனையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகளும் முழுமையாக வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பவுண்டரி அதிபர்கள் கூறுகையில், மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது. இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தினால் நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படும். இத்தொழிலைச் சார்ந்துள்ள இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தத் தொழிலைச் சார்ந்து இயங்கி வரும் வெட்கிரைண்டர், என்ஜினீயரிங், மோட்டார் பம்புகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படும். இந்த வேலை நிறுத்தம் நாங்கள் விருப்பப்பட்டு மேற்கொண்டதல்ல வேறு வழியின்றியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உடனடியாக மத்திய அரசு மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காட்மா எனப்படும் கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம் ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கதவடைப்பு போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் பங்கேற்று இருப்பதாகவும், இதனால் 10 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் எனவும் அச்சங்கத்தினர் தெரிவித்தனர்