tamilnadu

img

பீளமேடு, தண்ணீர் பந்தல் பகுதியில் சுரங்கப்பாதை : பி.ஆர்.நடராஜன். எம்.பியிடம் ரயில்வே அதிகாரிகள் உறுதி

கோவை, நவ. 30 –  மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோரிக்கையேற்று மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பீளமேடு மற்றும் தண்ணீர் பந்தல் பகுதிகளில் சுரங்கபாதை அமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தண்ணீர் பந்தல் பகுதியில் வாகனங்கள் செல்வதற்காக பாலம் கட்டும் பணிகள் கடந்த இரு வருடங்களாக நடந்து வருகிறது. இதன் காரணமாக அப்பாதை அடைக்கப்பட்டு இரண்டு கிலோ மீட்டர் சுற்றி கோவை மருத்துவக் கல்லூரியின் வழியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தினசரி வேலைக்கு செல்வோர், பள்ளிக்குச் செல்வோர் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் பீளமேடு பகுதியில் தண்ணீர்பந்தல் மற்றும் பீளமேட்டை இணைப்பதற்கான பாலம் கட்டப்பட்டு சமீபத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் ரயில்வே பாதையைக் கடந்து செல்ல சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனையடுத்து தண்ணீர் பந்தல் மற்றும் பீளமேடு பகுதிகளில் ரயில்வே பாதையை ஒட்டி சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பி.ஆர்.நடராஜன் எம்பியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்களின் கோரிக்கையின் நியாயம் உணர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்பி ரயில்வே அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற தெற்கு ரயில்வே ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று இத்திட்டத்திற்கான அவசியம் குறித்து வலியுறுத்தினார்.  இதனையேற்று திங்களன்று ரயில்வே அதிகாரிகள் இவ்விரு இடங்களையும் ஆய்வு செய்ய வருவதாக தெரிவித்திருந்தனர்.
இதன்தொடர்ச்சியாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சோமசுந்தரம், ரயில்வே துறை கோட்டப் பொறியாளர் திருமால், ரயில்வே கோட்ட கட்டுமானப் பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட ரயில்வேதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்பியிடம் அதிகாரிகள் கூறுகையில்,  தண்ணீர் பந்தல் மற்றும் பீளமேடு ஆகிய பகுதிகளில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும் என்றும் இது பாதசாரிகள் மட்டும் உபயோகிக்கும் சுரங்கப் பாதையாகவோ அல்லது சிறிய வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப்பாதையாகவே அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என உறுதியளித்தனர். இதில் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம்  மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.