கோயம்புத்தூர்:
நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் தமிழக ஜவுளித் தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதால் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கடிதம்வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஜவுளி உற்பத்திக்கு ஆதரமாகத் திகழும் நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்ந்து வருவதால் கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை உள்ளிட்டஒட்டுமொத்த ஜவுளித் துறையும் கடும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. அத்துடன் இந்த தொழிலை நம்பி பிழைக்கும் பல லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் பின்னலாடை தொழிலில் ஏற்றுமதி மூலம் ரூ.27ஆயிரம் கோடி அந்நியச் செலாவணியும், உள்நாட்டு சந்தை உற்பத்தி மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வர்த்தகமும் நடைபெறும் நிலையில், 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விருதுநகர், நெல்லை, தேனி, மதுரை உள்பட 20 மாவட்ங்களில் 5 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறிகள் இயங்குகின்றன. இதில் 10 லட்சத்து 19 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளும், விலையில்லா புடவை, வேட்டிகளும் உற்பத்தி செய்யும் 212 பவர்லூம் கூட்டுறவு நெசவாளர் சொசைட்டிகளும் உள்ளடங்கும்.
அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக செயல்படும் கைத்தறி நெசவுத் தொழிலில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் கைத்தறிகள் உள்ளன. இதன் மூலம் 3 லட்சத்து 19 ஆயிரம் நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதுதவிர இந்தியாவில் உள்ள மொத்த நூற்பாலைகளில், நிறுவப்பட்டுள்ள 5 கோடி 30 லட்சம் ஸ்பிண்டில்களில், தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 41 லட்சம் ஸ்பிண்டில்கள் (சுமார் 45 சதவிகிதம்) செயல்படுகின்றன. இந்த நூற்பாலைகளில் மட்டும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர். ஆக, தமிழக ஜவுளித் தொழில் 25 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜவுளித் தொழிலில் மூலப்பொருளான பஞ்சு, நூல் விலை ஏற்றத்தின் காரணமாக அவ்வப்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. எனவே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கடமையாகும்.
ஜவுளித் தொழிலுக்கு மூலப்பொருளாக இருக்கும் நூல் விலை, கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து கடுமையாக உயர்ந்துவருகிறது. கடைசியாக மார்ச் 1ஆம் தேதி திங்களன்று கிலோவுக்கு ரூ.10 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கடந்த ஏழு மாதத்தில்நூல் விலை கிலோவுக்கு ரூ.62 என்ற அளவுக்குவரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரக்கூடிய சில நாட்களிலும் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்த்த நூற்பாலை உரிமையாளர்கள் உத்தேசித்திருப்பதாகவும் தகவல் வருகிறது.
இதனால் திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. வெளிநாட்டு வர்த்தகர்களிடம் முன்கூட்டியே ஆடை விலைப் பேசி நிர்ணயித்த பிறகுதான் நூல்வாங்கி உற்பத்தி நடவடிக்கை தொடங்கப்படுகிறது. தொடர்ந்து ஏறி வரும் நூல் விலையினால், நிர்ணயித்த விலையில் ஆடை உற்பத்திசெய்ய முடியாமல் கடும் இழப்பைச் சந்திக்கும்நிலை ஏற்படுகிறது. எனவே சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கைவிட்டுப் போய், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது.
அதேபோல் விசைத்தறி தொழிலில் நூல் விலை உயர்வினால், உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. நிச்சயமற்ற சந்தை காரணமாக, துணிவிலை ஏற்றத்தாழ்வில் சிக்கி, ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதுடன், விசைத்தறி தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு, வருமானம் பாதிக்கிறது. மேலும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே கூலி உயர்வு வழங்கப்படாத நிலையில் தற்போதைய நூல் விலை ஏற்றத்தால் தறிகளை உடைத்து விற்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
கைத்தறி தொழிலிலும் நூல் விலை உயர்வினால் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. கைத்தறிஆடைகளை கூடுதல் விலையில் சந்தைப்படுத்தமுடியாத நிலையில், அதை ஈடுசெய்ய கைத்தறிநெசவாளர்களின் கூலியைக் குறைக்கின்றனர்.எனவே நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்து, பருத்தி கொள்முதல் செய்வதுடன், இந்திய பருத்திக் கழகம்(சிசிஐ) மூலம் நூற்பாலைகளுக்கு நியாயமானவிலையில் தொடர்ந்து பஞ்சு கிடைப்பதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். முன்பேர வர்த்தக, ஆன்லைன் சூதாடிகள், இடைத்தரகர்கள் பஞ்சைப் பதுக்கி செயற்கைத்தட்டுப்பாடு ஏற்படுத்தி, விலையை அதிகரிப்பதை தடுக்க வேண்டும்.
நூற்பாலைகள் உற்பத்தி செய்யும் நூலை, நேரடியாக வரைமுறை இல்லாமல் ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டு ஜவுளிஉற்பத்திக்குத் தேவையான நூல் கிடைப்பதை முதன்மையாக உறுதிப்படுத்த வேண்டும். தேவைக்குப் போக உபரி நூலை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கலாம். நூல் விலையை குறிப்பிட்ட காலத்துக்கு நிலையாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜவுளி மூலப்பொருளான பஞ்சு, நூலை சந்தை சக்திகளின் கட்டுப்பாட்டில் விட்டு விட்டுஅரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. இந்த நடவடிக்கையை உடனடியாக மத்திய அரசு செய்ய வேண்டும்.
நீண்ட காலத் தீர்வு என்ன?
அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். “தமிழக பருத்திக் கழகம்” உருவாக்க வேண்டும். இந்தியாவின் மொத்த பருத்தி விளைச்சல் சுமார் 360 லட்சம் பேல்களாகும். (ஒரு பேல் = 170 கிலோ). இந்திய நூற்பாலைகளின் ஆண்டுத்தேவை 270 லட்சம் பேல்கள். தமிழகத்தில் 40 சதவிகிதம் பருத்தி தேவை என வைத்துக் கொண்டால் 108 லட்சம் பேல்கள் ஆண்டுக்குத் தேவைப்படும். இதன் மதிப்பு தோராயமாக சுமார்20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். ஆனால் தமிழகத்தில் பருத்தி விளைச்சல் 6 லட்சம் பேல்கள் ஆகும். கூடுதல் சுமார் 100 லட்சம் பேல்கள் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய பிற மாநிலங்களில் இருந்து வாங்க வேண்டியுள்ளது.
எனவே தமிழகத்தில் நூல் விலையேற்றம் அல்லது நூல் தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாக “தமிழ்நாடு பருத்திக் கழகம்” உருவாக்க வேண்டும். தமிழக ஜவுளித்துறையின் அங்கங்களான பனியன், பவர்லூம்,கைத்தறி தொழில்கள் மற்றும் நூல் மில்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் விளைபொருள் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவும், தமிழ்நாடு பருத்திக் கழகம்எனும் அரசு நிறுவனத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.இந்த பருத்திக் கழகத்தின் பணி, விவசாயிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கச் செய்வதும், பஞ்சைபயன்படுத்தி நூல் தயாரிக்கும் நூற்பாலைகளுக்கு வருடம் முழுவதும் சீரான விலையில் பஞ்சை விநியோகம் செய்வதுமே ஆகும்.தமிழ்நாட்டில் நூற்பாலைகளின் தேவைக்குஏற்ப பருத்தி விளைச்சலை அதிகரிக்கவும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.