tamilnadu

img

சென்னைக்கு காய்கறி லாரிகளை அனுப்ப தடை - வர்த்தக சங்கம் முடிவு

மேட்டுப்பாளையம், மே. 6 - மேட்டுப்பாளையத்தில் கொரோனா தொற்று முழுமையாக முடக்கப்பட்டு விட்ட நிலையில் தொற்று மேலும் பரவாமல் இருக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு காய்கறி லாரிகளை அனுப்புவதில்லை என வர்த்தக சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு நீலகிரி திரும்பிய லாரி ஓட்டுனர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீலகிரியின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையத்தில் வாகன கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் இருந்து மேட்டுப்பாளையதிற்குள் நுழையும் பிரதான சாலையில் பவானியாற்றின் பாலம் அருகே தற்காலிக கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ள போலீசார் இவ்வழியே வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் ஆட்களை கண்காணித்து வருகின்றனர்.  மேலும், காவல் துறையினரோடு சுகாதாரத் துறையினரும் இணைந்து கடந்து செல்லும் வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் உடல் வெப்பத்தை தெர்மல் ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்கின்றனர். இதேபோல் உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது சரக்கு வாகனங்களில் என்ன எடுத்து செல்லப்படுகிறது, அனுமதிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறதா என கண்டறிவது சுலபமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும், மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறி ஏற்றிக்கொண்டு சென்று ஊர் திரும்பிய லாரி ஓட்டுனர்கள் ஒன்பது பேர் கண்டறியப்பட்டு அவர்களிடம் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மேட்டுப்பாளையம் மண்டிகளில் இருந்து சென்னைக்கு காய்கறி லாரிகளை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.