tamilnadu

img

ஜிஎஸ்டி வரியால் விலை குறையவில்லை- தொழில்தான் அழிந்துள்ளது

கோவையைச் சேர்ந்த வித்யா டிரேடர்ஸ் மோட்டார் பம்ப் உற்பத்தியாளர் செல்வகுமார் என்பவர் கூறுகையில், 5-7 சதவிகிதம் லாபம் வச்சு தான் வியாபாரம் பண்றாங்க. இதுல 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என்பது சிறு, குறு தொழிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது என்றே சொல்ல வேண்டும். இங்கே தொழில் என்பது மூலப்பொருட்கள் வாங்குவதற்கும், உற்பத்தி செய்து விற்கும் போது செய்த வேலைக்கு கூலி பெறுவதற்கும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பணம் வந்து சேர ஒன்றிலிருந்து, நான்கு மாதங்கள் வரையாகும். இவ்வாறு கைமாறுதல் சுற்றில் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்பது இயலாத காரியம். இவ்வாறு மூன்றுமாதங்கள் கடந்த பின் வரி செலுத்தும் போது அபராதம் விதிக்கப்படுகிறது. 15 கிலோ மீட்டருக்குள்ளான விற்பனைக்கு வரியில்லை எனப்படுகிறது. இந்த சலுகை பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத்தான் பயன்படுகிறது. சிறு, குறு தொழில் செய்வோருக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பம்ப் தொழிலில் பாதிக்குமேல் அழிந்து விட்டன. எல்லா பொருளுக்கும் ஜிஎஸ்டி பொருந்தும் என்றால் ஏன் டீசல் விலைக்கு ஜிஎஸ்டி இல்லை. ஜிஎஸ்டி கட்ட வெளியில் வட்டிக்கு வாங்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது. 3 மாதம் கழித்துதான் திருப்பிக் கொடுப்போம் என்னும் போது அதற்கான வட்டியை அரசாங்கம் தானே பெறுகிறது. எனவே பண புழக்கம் என்பது குறைந்து விட்டது. மூலப்பொருட்கள் வாங்கும் போது 18 சதவிகித வரி கொடுத்து விட்டு விற்பனை செய்யும் போது 12 சதவிகித வரி தான் என்றால் எப்படி சரியாக இருக்கும். ஜிஎஸ்டி வந்தால் விலைவாசி குறையும் என்றார்கள். ஆனால் இன்று எல்லா பொருள்களின் விலையும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உதாரணமாக ரூ.10 ஆயிரத்திற்கு மூலப்பொருள் வாங்கும்போது ரூ.11800ஆகிறது. இதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருளை 12 சதவிகிதம் மட்டும் ஜிஎஸ்டி சேர்த்து விற்கும்போது நட்டமேற்படுகிறது. ஜிஎஸ்டியால் விலைவாசிகுறையும் என அறிவிக்கப்பட்டாலும், கார்ப்பரேட் கம்பெனிகள்தான் லாபமடைந்து வருகின்றன. ஆகவே, கோவையில் உள்ள சிறுகுறு தொழில்கள் மற்றும் அவற்றைநம்பியுள்ளவர்களை காப்பாற்ற எண்ணினால் அதிகபட்சம் 7 சதவிகிதம் வரி விதிக்கலாம். அதுவும் வருடத்திற்கு ஒரு முறை செலுத்தினால் போதும் என்ற நிலை இருக்க வேண்டும். அதேபோல், மோடி அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் இது போன்றதுதான். இந்த பாதிப்பிலிருந்து இன்றும் விடுபட முடியவில்லை என்று கூறிய செல்வகுமார், குறைந்தபட்ச தொகை வங்கி கணக்கில் இல்லையென்றால் அபராதம் விதிக்கும் வங்கிகள், ஏடிஎம்மில் பணமில்லையென்னும் போது வாடிக்கையாளருக்கு நட்ட ஈடு வழங்குவதில்லை. மக்களிடம் அபாரதம் விதிக்கும் வங்கிகளும், அரசாங்கமும், வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லைஎன வாடிக்கையாளர் வெறுங்கையுடன் திரும்பும்போது அவருக்கு ஏன் நட்ட ஈடு வழங்க கூடாது என்றும் கேள்வி எழுப்புகிறார்.