tamilnadu

மோடி இருக்கும் வரை எந்த தொழிலும் உருப்படாது

கோவையைச் சேர்ந்த நூல் உற்பத்தியாளர் ஜி.வேணுகோபால் என்பவரிடம் பேசுகையில், நான் அடிப்படையில் ஒரு ஆர்எஸ்எஸ்காரன். ஜன சங்கம் காலத்திலிருந்து பிஜேபி-லே இருக்கிறேன். வாஜ்பாய் வந்தபோது, அவரக்கு மலர்க்கிரீடம் வைத்து வாழ்த்தி வரவேற்றோம். அதன்பிறகு தான் அவர் பிரதமரானார். கடந்த தேர்தலில் எங்களைப் போன்றவர்களை அழைத்து விருந்து வைத்து, எப்படி தேர்தல்வேலை செய்யலாம் என ஆலோசனை செய்தனர். ஆனால், இந்த தேர்தலில் நாங்கள் வேண்டாம் என கட்சியே நினைத்ததா என தெரியவில்லை. எங்களையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களே ஜெயித்து விடலாம் என நினைக்கிறார்களா என்றும் தெரியவில்லை. தொழிலை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளாக யார்ன் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய நிறுவனத்தில் 15 பேர் வேலை செய்து வந்தனர். கார், வீடு என வாங்கினோம். ஆனால், பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு இன்று நானும், என்னோடு மேலும் ஒருவர் மட்டுமே இருக்கிறோம். கார் வாங்கிய தவணையே இரண்டு மாதங்களாக செலுத்த முடியவில்லை. மிக கேவலமாக உள்ளது. 4 ஆயிரம் ரூபாய்பணத்திற்கே நாலு நாளாக கடைவிரிச்சு உக்காந்திருக்கிறேன். இனி பிச்சைக்காரர்கள் சங்கம் அமைக்கலாம்னு தான் இருக்கிறோம் என்று கடும் வெறுப்புடன் தெரிவிக்கிறார்.இதேபோல் அருகிலிருந்த அவருடைய நண்பர் பவுண்டரி தொழில் செய்து வரும் இளங்கோ என்பவரிடம் கேட்டபோது, மோடி இருக்கும் வரை எந்த தொழிலும் உருப்படாது. இன்ஜினியரிங் தொழில் மட்டுமல்ல. திருச்செங்கோட்டிலுள்ள ரிக் தொழில் 2000 பட்டறைகள் இருந்தன. இன்று வெறும் 50 பட்டறைகளே உள்ளன. பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனாலும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. 18 சதவிகித ஜிஎஸ்டி வரி என்பது நுகர்வோரின் தலையில்தான் சுமத்தப்பட்டுள்ளது. ரூ.10ஆயிரம் மதிப்பிலான பொருளுக்கு இன்று 12 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது எனக் குறிப்பி்டடார்.அப்போது இடையில் குறுக்கிட்ட வேணுகோபால் மேலும் பேசுகையில், பரபரப்பா தொழில் செய்யும் நேரம் இது. இன்று தொழில் இல்லாமல் டீக்கடையில் ஓசி டீக்காக உட்கார்ந்திருக்கிறோம். தொழிலில் தோல்வியடைந்தவர்கள் டாஸ்மாக் கடையில் உட்கார்ந்துள்ளனர் என்றார்.