ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கோரி மார்க்சிஸ்ட் கட்சி மனு
பல்லடம் வட்டம், 63 வேலம்பாளையம் கிராமத்தில் வீட்டுமனையின்றி அவதியுறும் ஏழை மக்களுக்கு, வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் பல்லடம் வட்டாட்சியரிடம் வியாழனன்று மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியக் குழு சார்பில் அளித்துள்ள மனுவில், 63 வேலம்பாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 63 வேலம்பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனைகள் இல்லை. எனவே 63 வேலம்பாளையத்தில் க ச எண்:76 மற்றும் க ச எண் :88 ஆகிய காலைகளில் மந்தைவெளி புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இந்த 14 ஏக்கர் நிலங்களை, நத்தம் புறம்போக்கு நிலங்களாக வகை மாற்றம் செய்து, வீட்டுமனை இல்லாத மக்களுக்கு வீட்டுமனை பட்டா தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மனு அளிக்கும் இயக்கத்தில், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.முருகேஷ், மோகனசுந்தரம், கிளைச் செயலாளர் பிரதாப், ஆனந்தன், செல்லமுத்து மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.